2018-03-09 15:11:00

ஆஸ்ட்ரிய ஆர்த்தடாக்ஸ் இல்லத்திற்கு திருத்தந்தை நன்கொடை


மார்ச்,09,2018. ஆஸ்ட்ரியா நாட்டில் கட்டப்பட்டு வருகின்ற, முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை துறவு இல்லத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியாவின் கிழக்குப் பகுதியில், Burgenland மாநிலத்தில் கட்டப்பட்டுவரும் புனித அந்திரேயா துறவு இல்லத்திற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள நன்கொடையை,   கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தலைமையிலான குழு, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்களிடம் வழங்கியுள்ளது.

ஆஸ்ட்ரியாவில் அமலுக்குவந்த ஆர்த்தடாக்ஸ் விதிமுறையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா, வியன்னா நகரின் கிரேக்க-ஆர்த்தடாக்ஸ் மூவொரு இறைவன் பேராலயத்தில் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் இந்த நன்கொடையை வழங்கியது, கர்தினால் கோக் அவர்கள் தலைமையிலான குழு.

இந்நிகழ்வில் பேசிய கர்தினால் கோக் அவர்கள், இந்தக் கட்டடத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்கமுதல் ஆதரவை வழங்கினார் எனவும், ஆஸ்ட்ரியாவின் கிழக்கு எல்லையிலுள்ள ஆர்த்தடாக்ஸ் மறைமாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய மக்களிடையே உறவைக் கட்டியெழுப்புவதற்குப் பாலமாக அமையும் என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்ட்ரியாவில் 1967ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஆர்த்தடாக்ஸ் விதிமுறையின்படி, அந்நாட்டின் பள்ளிகளில், ஆர்த்தடாக்ஸ் மதம் கற்பிக்கப்படுவதற்கும், அப்போதிருந்த ஆர்த்தடாக்ஸ் சமூகங்களை அங்கீகரித்துடன், புதிய சமூகங்கள் உருவாக்கப்படுவதற்கும் அனுமதியளிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.