2018-03-09 14:51:00

ஒப்புரவு அருளடையாளத்தில் வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கின்றோம்


மார்ச்,09,2018. மார்ச், 09, இவ்வெள்ளிக்கிழமையன்று, ‘ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள வழிபாடு நிகழ்கின்றவேளை, இந்த அருளடையாளத்தின் முக்கியத்துவத்தையும், இறைவனோடு நாம் ஒப்புரவாக வேண்டியதன் அவசியத்தையும், தன் டுவிட்டர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நிறைய காரியங்கள் ஆற்றவேண்டிய சூழலில், நம் ஆன்மீக வாழ்விலும், இறைவனோடு நமக்குள்ள உறவிலும், உண்மையிலேயே முக்கியமானதை நாம் அடிக்கடி புறக்கணித்து விடுகின்றோம், எனவே, இவ்வாறு நடந்துகொள்வதை நிறுத்தி, செபத்திற்கு நேரம் ஒதுக்குவோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.

பிற்பகலில் வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், “ஒப்புரவு அருளடையாளத்தில், ஆண்டவரிடம் திரும்பும் நம் பாதையையும், வாழ்வின் அர்த்தத்தையும் கண்டுகொள்கின்றோம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும், மார்ச், 09, இவ்வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ‘ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.