சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ நீதிப் பணி

சிரியாவில் அப்பாவி மக்கள் மீண்டும் படுகொலை

சிரியா போரினால் அழிவுற்றிருக்கும் Atareb நகரம் - AP

10/03/2018 15:23

மார்ச்,10,2018. சிரியாவில் நடைபெற்றுவரும் இரத்தம் சிந்தும் சண்டையில், பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றவேளை, இந்நிலைமை, அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, சிறார்க்கு, இப்பூமியில் நரகமாக இருக்கின்றது என்று, சிரியா திருப்பீட தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின், யுனிசெப் குழந்தை நல நிறுவனத்தின், சிரியா பகுதியின் இயக்குனர் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய, கர்தினால் செனாரி அவர்கள், உலகில், சிறார்க்கு மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக சிரியா மாறியுள்ளது  என்று குறிப்பிட்டார்.

ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவது மிகவும் கொடூரமானது என்றுரைத்துள்ள, கர்தினால் செனாரி அவர்கள், குண்டு வீச்சு தாக்குதல்களால், உறுப்புக்களை இழந்துள்ள மற்றும் உயிரிழந்துள்ள, சிறாரின் நிலைகளை விளக்கியுள்ளார்.

உலகில் இடம்பெற்றுள்ள பேரிடர்களைப் பார்த்துள்ளேன், ஆனால், 1994ம் ஆண்டில் ருவாண்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் போன்று, சிரியாவில் விவரிக்க முடியாத அளவில் வன்முறை இடம்பெறுகின்றது என்றுரைத்த, கர்தினால் செனாரி அவர்கள், எட்டாவது ஆண்டாக, சிரியாவில் சண்டை இடம்பெற்று வருகிறது என்று கூறினார்.

சிரியாவில், 2011ம் ஆண்டில் சண்டை தொடங்கியதிலிருந்து, அறுபது இலட்சம் சிறார் உட்பட, ஒரு கோடியே 35 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டினர், கடும் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏறத்தாழ ஒரு கோடியே 15 இலட்சம் சிறாருக்கு, போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்று ஐ.நா. கணித்துள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

10/03/2018 15:23