2018-03-10 15:10:00

இயேசு நம்மை அன்புகூர அனுமதிக்குமாறு கேட்கிறார்


மார்ச்,10,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள வழிபாட்டு நிகழ்வை தலைமையேற்று நிறைவேற்றினார்.

அந்த வழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுளின் அன்பு, நாம் கற்பனை செய்வதைவிட பெரியது என்றும், நாம் அவரின் பிள்ளைகள் என்ற முறையில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு மிக ஆழமானது என்றும் கூறினார்.

கடவுளின் அன்பு, நம் மனசாட்சி நம்மைக் குத்திக்காட்டுகின்ற எந்தப் பாவத்தையும் கடந்து, நம் கற்பனைக்கு எட்டாத அளவில், வேறு எதையும்விட பெரியது எனவும், அவரின் அன்புக்கு எல்லைகள் இல்லை என்பதை எவரும் அறிவார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் சுதந்திரத்தைப் பிறர் பறித்துக்கொள்வார்கள் என்ற அச்சத்தில், பிறரின் முன்னிலையில், நாம் வெளிப்படுத்த முயற்சிக்கும் எல்லாத் தடைகளிலிருந்தும் கடவுளின் அன்பு நமக்கு விடுதலையளிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, பாவத்தால் வாழ்வில் அவரின் பிரசன்னத்தைப் புறக்கணித்தாலும், அவரின் அன்பு ஒருபோதும் குறையாது என்றும் மறையுரையில் கூறினார்.

பேதுருவை அன்புகூர அனுமதிக்குமாறு இயேசு அவரிடம் கேட்கிறார் எனவும், இயேசு நம்மை அன்புகூர அனுமதிப்பது, உண்மையிலேயே கடினமானது எனவும் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.