சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை : கடல் நீரை குடிநீராக்கி சாதனை

கடலில் மிதக்கும் கலம் - AFP

12/03/2018 14:38

மாணவர் மைக்கேல்ராஜ் அவர்கள், புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலுள்ள பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர். இவர், சூரிய ஒளி மூலம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். ‘இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவு கடல் நீரைக் குடிநீராக்கி பெற முடியும். அதையே விரிவுபடுத்தினால் ஒரு கிராமம் பயன்பெறும் அளவுக்கு குடிநீர் பெற முடியும்’ என்று சொல்கிறார் மைக்கேல்ராஜ். ஒரு பெரிய தொட்டியில் கடல் நீரைச் செலுத்தி, அதை ஒளி ஊடுறுவல், ஒளி குவிப்பு, ஒளி எதிரொலிப்பு, சோலார் ஹீட்டர் அதாவது, சூரிய ஆற்றல் சூடுபடுத்துவான் போன்ற பல வழிகளில் சூடுபடுத்தி ஆவியாக்க வேண்டும். அதில் இருந்து வரும் நீராவியை, குழாயின் வழியாக, நிலத்தின் கீழ் உள்ள தொட்டிக்கு அனுப்ப வேண்டும். இதனால், வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நீராவி குளிர்ந்து குடிநீராக மாறிவிடும். சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாத, பசுமையான ஆற்றல் மூலம், சராசரியாக இரண்டு லிட்டர் கடல்நீரை, இந்த சூரிய ஒளி ஆற்றல் முறையில் காய்ச்சி வடிகட்டும்போது, ஒரு லிட்டர் குடிநீரைப் பெறலாம். இந்த மாதிரி செய்முறைக்கு, பெரிய அளவில் செலவு எதுவும் ஆகவில்லை. மொத்தச் செலவே 2,500 ரூபாய் ஆனது. இதையே நாம் பெரிய அளவில், திட்டமிட்டு வடிவமைத்தால் ஒரு வீட்டுக்கு அல்லது ஒரு கிராமத்துக்குத் தேவையான குடிநீரைப் பெற முடியும். பெரிய அளவில், ஒரு பிளான்ட் அமைக்கும்போது, சூரியஒளி தகடுக்கு ஆகும் செலவே முக்கியமானதாக இருக்கும். மற்றபடி பெரிய செலவு பிடிக்காது. இவ்வாறு தனது கண்டுபிடிப்பு பற்றி விளக்கியுள்ளார், இந்த இளம் அறிவியலாளர் மைக்கேல்ராஜ். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், புதுச்சேரி அரசின் கல்வித்துறையும் இணைந்து நடத்திய, மாநில அளவிலான ‘இன்ஸ்பைர்’ அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்தத் திட்ட மாதிரி, டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகி இருக்கிறது. இந்த திட்டம் தேசிய அளவில் வெற்றிபெறும்பட்சத்தில், ஜப்பான் நாட்டுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை பற்றி அறிய மைக்கேல்ராஜ் அழைத்துச் செல்லப்படுவார் எனப் பெருமையுடன் சொல்லியுள்ளார், மைக்கேல்ராஜின் ஆசிரியர் குருநாதன்.

“அன்பு இளையோரே, கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அறிவை, உண்மைக்கும், தேவையில் இருப்போருக்கும் பயன்படுத்துவது நல்லது”. இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் Hackathon வத்திக்கான் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி, மார்ச் 11, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், கூறினார். மார்ச்,13 (மார்ச் 13,2013) இச்செவ்வாய், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவு நாள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து பணியாற்ற, அவருக்காகச் செபிப்போம், திருத்தந்தையை வாழ்த்துவோம்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

12/03/2018 14:38