2018-03-12 15:56:00

முன்னோக்கி அழைத்துச் செல்வதே நம் விசுவாசம்


மார்ச்,12,2018. இறைவனின் முதல் அருளைப் பெற்றவுடனேயே அதிலேயே தங்கிவிடுகிறவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள், ஏனெனில், கடவுளுடன் இணைந்திருப்பதில் கிட்டும் மகிழ்வில் முன்னோக்கிச் செல்பவர்கள் அவர்கள் என, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் விசுவாசம் என்பது, துவங்கிய இடத்திலேயே நின்றுவிடாமல், தொடர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும் என கூறினார்.

கடவுளைக் கண்டடையவும், அவரோடு இணைந்திருக்கவும், அவரில் மகிழ்ச்சி காணவும், தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதே விசுவாசம் என்று தன் மறையுரையில் விளக்கிக் கூறினார் திருத்தந்தை.

கடவுள் நம் வாழ்வில் வந்து நமக்கென ஒரு புதுமையை ஆற்றிச் செல்லும்போது, அது நம்மை அங்கேயே நிறுத்தி வைப்பதில்லை, மாறாக, நாம் முன்னோக்கிச் செல்வதற்கான அழைப்பாக மாறுகிறது, எனவும் கூறினார் திருத்தந்தை.

நாம் கூண்டுக்குள் அடைபட்டவர்களாகவோ, ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களாகவோ மாறாமல், முன்னோக்கிச் செல்பவர்களாக மட்டுமல்ல இறைவனோடு இருப்பவர்களாகவும் மாறவேண்டும் என்ற அழைப்பையும் தன் மறையுரையில் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.