2018-03-13 14:41:00

இமயமாகும் இளமை - பணிவும், கனிவும் உருவாக்கும் மாற்றங்கள்


மார்ச் 13, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானிலும், திருஅவையிலும், ஏன்... இன்னும் சொல்லப்போனால், உலக அவைகளிலும் 'மாற்ற அலைகளை' உருவாக்கி வருகிறார் என்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. ஆனால், பிறர் காணும்படி உருவாகும் வெளிப்புற மாற்றங்களை விட, மனிதர்கள் மனதில் அவர் உருவாக்கிவரும் ஆழமான தாக்கங்களும், அவற்றின் விளைவாக அவர்கள் வாழ்வில் உருவாகிவரும் மாற்றங்களும் அவரது தலைமைப் பணியின் முக்கிய அம்சங்கள் என்பது உறுதி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, தலைமைப் பணியேற்றார். இரு வாரங்களுக்குப் பின்னர், (மார்ச் 28) Casal del Marmo என்ற பெயருடன், உரோம் நகரில் இயங்கிவரும் வளர் இளம் கைதிகள் இல்லத்தில், புனித வியாழன் மாலைத் திருப்பலியை நிறைவேற்றினார். அங்கு, வளர் இளம் கைதிகள் 12 பேரின் காலடிகளைக் கழுவினார். இச்செய்தியை, அமெரிக்காவின், Los Angeles நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் கேள்வியுற்றனர். அவர்களில் ஒரு சிலர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மடல்களை அனுப்பி வைத்தனர். தங்களைப் போன்ற வளர் இளம் கைதிகளை மனிதர்களாக மதித்து, அவர்கள் காலடிகளைக் கழுவியத் திருத்தந்தையை எண்ணி, உள்ளம் நெகிழ்ந்து, இளம் கைதிகள் எழுதியுள்ள மடல்களில் இரண்டு இதோ:

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,

என்னைப் போல், இத்தாலியில் சிறையில் இருக்கும் இளையோரின் காலடிகளை நீங்கள் கழுவியதற்காக நன்றி. தவறு செய்த எங்கள் மீது இந்த சமுதாயம் நம்பிக்கை இழந்துவிட்டது. ஆனால், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை. மிக்க நன்றி.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,

என்னைப் போன்ற ஓர் இளைஞனின் காலடிகளை நீர் கழுவுகின்றீர். போதைப் பொருளுக்கு அடிமையானவன் நான். தற்போது அதிலிருந்து விடுதலை பெற முயன்று வருகிறேன். நீங்கள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். இப்பழக்கத்தைக் கைவிடவும், போதைக்கு அடிமையான மற்றவர்களைக் காப்பாற்றவும் நான் முயற்சிகள் எடுப்பேன்.

இளையோரிடையே மாற்றங்களை உருவாக்க முக்கிய காரணம், திருத்தந்தையின் பணிவும், கனிவும் என்றால், அது முற்றிலும் உண்மை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.