2018-03-13 14:50:00

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கடிதம்


மார்ச்,13,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெய்யியல் மற்றும் இறையியலில் ஆழமான பயிற்சி பெற்றுள்ள ஒரு மனிதர் என்றும், அவர், குறிப்பிட்ட மெய்யியல் மற்றும் இறையியல் உருவாக்கம் இல்லாத வெறும் நடைமுறை மனிதர் என்று சொல்வது, அறிவற்ற முற்சார்பு எண்ணத்தின் வெளிப்பாடு என்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறையியல் என்ற தலைப்பில், 11 எழுத்தாளர்கள் எழுதிய 11 நூல்கள் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மகிழ்வதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதிகாரப்பூர்வப் போதனைகளைப்பொருத்தவரை, தனது பாப்பிறைப் பணிக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்கும் இடையே ஓர் உள்ளார்ந்த ஒற்றுமை இருப்பதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

மார்ச்,12, இத்திங்களன்று, இந்த 11 நூல்களும் வெளியிடப்பட்ட நிகழ்வை முன்னிட்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனக்கு அனுப்பியிருந்த கடிதத்தை, திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் தலைவர், பேரருள்திரு தாரியோ எத்வார்தோ விகனோ அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் வாசித்தார்.

இச்சிறிய நூல்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெய்யியல் மற்றும் இறையியலில் ஆழமான பயிற்சி பெற்றுள்ள ஒரு மனிதர் என்பதைச் சரியாக விளக்குவதன் வழியாக, எடுத்துரைக்கும் பாங்கு மற்றும் மனநிலையில் வேறுபாடுகள் இருந்தாலும்கூட, எம் இரு பாப்பிறைப் பணிகளுக்கு இடையே, உள்ளார்ந்த தொடர்ச்சி இருப்பதைப் பார்ப்பதற்கு உதவியுள்ளன எனவும், அக்கடிதம் கூறுகிறது.  

கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறையியல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல்களை, வத்திக்கான் நூல் வெளியீட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு, திருத்தந்தை 16ம் அவர்களின் இக்கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் தென் அமெரிக்க, முதல் இயேசு சபை, மற்றும், அசிசி நகர் புனித பிரான்சிசின் பெயரை முதலில் ஏற்ற திருத்தந்தையாக இருக்கின்றார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.