2018-03-14 15:54:00

இமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி


பசுமை இந்தியா, சுகாதார இந்தியா, தூய்மை இந்தியா போன்ற அம்சங்களை வலியுறுத்தி, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 15 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர், முப்பது வயது நிரம்பிய பிரதீப்குமார். பி.காம் பட்டதாரியான இவர், கடந்த 2013ம் ஆண்டு நடந்த இரயில் விபத்தில் ஒரு காலை இழந்துள்ளார். ஆனாலும் வாழ்க்கையில் எதையாவது செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்து, சாலை பாதுகாப்பு, பசுமை இந்தியா, தூய்மை இந்தியா, சுகாதார இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலன் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இப்பயணத்தை கடந்த நவம்பர் 14ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள, தனது சொந்த ஊரான இந்தூரிலிருந்து தொடங்கினார். இதுவரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சுற்றி வந்த அவர், தமிழகத்தில் தனது பயணத்தை பல்வேறு மாவட்டங்கள் வழியாக மேற்கொண்டு, கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று, வேலூர் வந்து சேர்ந்தார். அச்சமயத்தில் தன் பயணம் குறித்து பேசிய பிரதீப்குமார் அவர்கள், இதுவரை ஐந்து மாநிலங்களைக் கடந்து வந்துள்ளேன். இங்கிருந்து சென்னை  செல்லும் நான் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று ஜூன் 18ம் தேதி எனது ஊரான இந்தூரில் பயணத்தை நிறைவு செய்கிறேன். இந்த பயணத்தின் மொத்த தூரம் 15 ஆயிரம் கி.மீ. இதுவரை ஐந்தாயிரம் கி.மீ. பயணித்துள்ளேன். எனக்கு முன்னால் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவர், பத்தாயிரம் கி.மீ பயணம் செய்துள்ளார். அந்த சாதனையை விஞ்சி 15 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்து உலக சாதனை படைக்க உள்ளேன். இதுவரை ஒரு இலட்சம் பேரைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். தினமும் ஏறத்தாழ 100 கி.மீ தூரம் வரை பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.