2018-03-15 14:05:00

இமயமாகும் இளமை : சமூக அக்கறை களத்தில் இளம்பெண்


நான்காண்டுகளுக்குமுன், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக, மாணவர்களைப் பெரிதாகத் திரட்டி போராட்டம் நடத்தியவர் இளம் பெண் வளர்மதி. படிப்பு முடிந்ததும் வேலை வருமானம் என்று தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை இவர். நெடுவாசலில் அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி, அந்த ஊர் மக்களுக்கு ஆதரவாக, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் வளர்மதி. அதைக் `குற்றம்' என்று அரசு சொல்ல, `கடமை' என்று வளர்மதி சொன்னார். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் 36 நாள்கள் சிறைவாசம். பின்னர், நெடுவாசல் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததற்காக, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ், மேலும் 56 நாள்கள் சிறைவாசம். நீதிமன்றத்தின் மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தை உடைத்து வெற்றி மகளாக, வெளியே வந்தபோதே, அநித்தாவின் மரணத்திற்கு நீதிகேட்டு கோஷம் போட்டபடியே வந்தார் வளர்மதி. இவ்வாறு, மீனவர் பிரச்சனை முதல், விவசாயிகள் பிரச்சனைகள் வரை, தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்ற இளம்பெண் வளர்மதி அவர்களை, 2017ம் ஆண்டின் சிறந்த பத்து இளையோரில் ஒருவராகத் தேர்வு செய்து, பாராட்டி, விருது வழங்கியுள்ளது விகடன் குழுமம். சேலம், வீமனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி, இளங்கலை விவசாயப் படிப்பை முடித்து, இப்போது இதழியல் படித்து வருகிறார். அரசியல் தெளிவும், சமூக அக்கறையும் இணைந்த வளர்மதியின் மக்கள் போராட்டங்கள் துணிவுடன் தொடர்கின்றன. பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் வளர்மதி, சமூக அழுத்தமே ஒருவரைப் போராட வீதியில் இறக்கிவிடுகிறது என்பதற்கு, சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்வதற்கும், மூச்சுவிடுவதற்கும், படிப்பதற்கும், எதற்கும் பணம் தேவைப்படும் சமூகத்தில், உண்மையான சனநாயகம் தழைக்கும்வரை, மக்கள் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி பிறக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று சொல்கிறார், சமூக அக்கறை கொண்ட இளம்பெண் வளர்மதி.

ஆதாரம் : விகடன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.