2018-03-15 15:01:00

துணிவோடும், பொறுமையோடும் செபிக்க வேண்டும் - திருத்தந்தை


மார்ச்,15,2018. இறைவனின் குழந்தைகள் என்ற சுதந்திரத்துடன், துணிவோடும், பொறுமையோடும் செபங்களை மேற்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இஸ்ரயேல் மக்களை அழித்துவிடும் அளவு கோபம் கொண்டிருந்த இறைவனிடம், தன் மக்களுக்காகப் பரிந்து பேசும் மோசேயைக் குறித்து, விடுதலைப் பயண நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவன் கோபம் கொண்டிருந்தாலும், அவருக்கு முன் அஞ்சி, அவரை மகிழ்விக்கும் வகையில் பேசி மழுப்பாமல், தன் உள்ளத்தில் இருந்த எண்ணங்களை உண்மையாக எடுத்துரைக்க மோசே துணிவு கொண்டிருந்தார் என்பதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார் திருத்தந்தை.

பரிந்துரை செபத்தில், துணிவும், பொறுமையும் முக்கியமான பண்புகள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எரிக்கோ நகர வாசலில், இயேசுவிடம் குரல் எழுப்பி மன்றாடிய பார்வையற்றவரை மற்றுமோர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.

தங்கள் 'அத் லிமினா' சந்திப்பிற்கென உரோம் நகருக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் ஆயர்களும், அப்போஸ்தலிக்க நிர்வாகியும், இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, திருப்பலி நிறைவேற்றினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.