2018-03-15 14:18:00

நேர்காணல் – திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த ஓராண்டு நிகழ்வுகள்


மார்ச்,15,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுருவின் 265வது வழித்தோன்றலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு, மார்ச் 13, இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிறைவு, மார்ச் 19, வருகிற திங்களன்று நிகழ்கின்றது. திருஅவையின் தலைமைப்பணியில் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த ஓராண்டு நிகழ்வுகளை அலசுகிறார், அருள்பணி இம்மானுவேல் அமல்ராஜ், சலேசிய சபை. இவர் உரோம் நகரில், அறநெறியியல் துறையில், அறநெறிப் பார்வையில் இறை இரக்கம் என்ற தலைப்பில், தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார் .

வத்திக்கான் வானொலியின் அன்பான பிரியர்களே!

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்து ஆறாம் ஆண்டிலே அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, சிறப்பாக கடந்த ஓர் ஆண்டிலே, திருச்சபைக்காகவும், மானுடத்திற்காகவும் அவர் செய்த எண்ணற்ற நற்செயல்களிலே, ஒரு சிலவற்றை நான் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

முதலாவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமது திருச்சபை இறை இரக்கத்தை மையப்படுத்திய திருச்சபை என மொழிந்து இத்திருச்சபைக்கு ஒரு புது முகத்தை, புத்துணர்வை, புதுப்பொலிவைத் தந்ததோடு, திருச்சபையின் பல்வேறு பரிமாணங்களை அவ்வப்போது நினைவூட்டி வருகிறார். எப்படிப்பட்ட திருச்சபையை நமது திருத்தந்தை விரும்புகிறார் எனத் தெரியுமா? ஏழைகளின் திருச்சபையை, சொகுசான வாழ்வைப் புறக்கணித்து இரக்கத்தின் செயல்களை மையப்படுத்தி வாழும் நல்ல சமாரியர் திருச்சபையை, நற்செய்தியை மகிழ்ச்சியோடு மக்களுக்கு அறிவிக்கும் திருச்சபையை, அன்பின் மகிழ்ச்சியை குடும்பங்களிலே அனுதினமும் பகிர்ந்து வாழும் திருச்சபையை, மக்களின் குறைகளையும், பலவீனங்களையும் ஏற்று மக்களை நற்குணங்களிலும், நற்செயல்களிலும் உறுதிபடுத்தும் திருச்சபையை, மன்னிக்கும் திருச்சபையை, குணமளிக்கும் திருச்சபையை, பாதுகாப்பான மையத்தை விட்டு விளிம்பிலுள்ள மக்களை நோக்கிப் பயணிக்கும் திருச்சபையை, பணியின் நிமித்தமாக வீதிக்கு வந்து தன்னையே கறைபடுத்திக்கொள்ளத் தயங்காத திருச்சபையை, ஏற்றத் தாழ்வுகளற்ற, படிநிலைகளை பற்றிக்கொள்ளாத கடவுளின் மக்கள் வாழும் திருச்சபையை, மற்ற சமயங்களோடு, மக்களோடு உரையாடும் திருச்சபையை, உறவாடும் திருச்சபையை, செபிக்கும் திருச்சபையை விரும்புகிறார்.

இரண்டாவதாக, திருச்சபையிலே ஏழை எளியவருக்கு முன்னுரிமை வழங்குவதன் அடையாளமாக, கடந்த ஆண்டு உலக ஏழையர் தினத்தைத் துவங்கி வைத்தார். அதை ஒவ்வொரு வருடமும், கிறிஸ்து அரசர் ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறன்று கொண்டாடவும், ஏழைகளுக்காக செபிக்கவும், பொருளுதவிகளை முன்னெடுக்கவும் அழைக்கின்றார். திருத்தந்தையைப் பொறுத்தவரையில் ஏழைகள் நமது வாழ்வின் ஆசான்கள். எனவே, நாம் அவர்களை கைவிடலாகாது, புறந்தள்ளலாகாது, மாறாக, அரவணைத்துப் பேணிக்காத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.

மூன்றாவதாக, இளைஞர்கள், இளம் பெண்கள் திருச்சபையிலும், உலகிலும் சிறந்த பங்களிப்பைத் தர வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், திருச்சபைக்கு தாய் என்ற முகம் மட்டும் போதாது மாறாக, இளைஞர் என்ற ஒரு முகமும் தேவை என்று எடுத்தியம்புகிறார், இறை இயேசுவையும், இறை வார்த்தையையும், அன்னை மரியாளையும் இளைய சமுதாயம் பின்பற்றி, காயப்பட்டிருக்கும் உலகிற்கு குணமளிக்கும் தீர்வுகளையும், எதிர்நோக்கையும் வழங்கி, மாற்றத்திற்குரிய ஆற்றல்களாக செயல்படவேண்டுமென அழைக்கிறார். மேலும், “இளையோரும், நம்பிக்கையும், தெளிந்துதேர்தலும்” என்ற தலைப்பில் ஆயர் பேரவையொன்றை அழைத்து அதற்கான தயாரிப்பிலே இளைஞர் இளம் பெண்களை தொடக்கமுதலே ஈடுபடுத்தியிருப்பது, திருத்தந்தை இளையோர் மீது வைத்திருக்கின்ற மட்டற்ற நம்பிக்கையையும், பற்றுறுதியையும், அளவுக் கடந்த அன்பையும் காட்டுகின்றது என்றால்; அது மிகையாகாது.

நான்காவதாக, கிறிஸ்துவின் உடல் பிளவுபட்டதல்ல, மாறாக பல உறுப்புகள் கொண்ட ஒரே உடல்;. பல்வேறு நிலைகளிலே கிறிஸ்தவ திருச்சபைகள் நம்மிடமிருந்து பிரிந்திருந்தாலும், அவையனைத்தும் சகோதரத்துவ உறவிலே இணைந்து கிறிஸ்துவைத் தலைவராகக்கொண்டு ஒரே உடலாக வாழவேண்டும் என்பதை நமது திருத்தந்தை ஆசிக்கிறார். கடந்த ஆண்டு எகிப்திற்கு சென்றிருந்தபோது காப்டிக் திருச்சபைத் தலைவரோடு இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி இனி இவ்விரு திருச்சபைகள் ஒன்று மற்றொன்றின் திருமுழுக்கு அருளடையாளத்தை முழுமையாய் ஏற்றுக்கொள்ளும். மேலும், கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து இரத்தம் சிந்தி மரிப்பவர்களை, மற்ற மக்கள்;;;, கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்றே அடையாளப்படுத்துவதால், நமது திருத்தந்தை, அடிப்படையிலே நம்மிடையே “இரத்த கிறிஸ்தவ ஒன்றிப்பு”  நிலவி வருகின்றது இருப்பினும், நாம் அன்றாட சாட்சிய வாழ்விலும்; கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.

ஐந்தாவதாக, உலகிலே நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக எழும் முதல் குரல் நமது திருத்தந்தையுடையதாகவே இருக்கின்றது. உலகமயமாக்கல், நுகர்வு கலாச்சாரம், வளர்ச்சி மைய பொருளாதாரம் போன்றவற்றின் பேரில் ஏழை எளியவர்களை சுரண்டி, இயற்கையையும், இயற்கை வளங்களையும் சூறையாடி வாழும் பணக்கார மற்றும் அரசியல் வர்க்கத்திற்கு எதிராக எழும்; குரலாகத் திகழ்கின்றார். மேலும், போர்கள், உள் நாட்டுக் கலவரங்கள், இனம், சமயம், பாலினம் சார்ந்த வன்முறைகளை கண்டித்து, துன்புறுகிறவர்களுக்கும், அகதிகளுக்கும் ஆதரவளித்து, உதவிக் குரலெழுப்பி, செபித்து, அவர்களை சந்தித்து, துயரத்தில் பங்கு கொள்வதில் முன்னிற்பவர் நமது திருத்தந்தை.

இந்நற்செயல்கள் வழியாக, மனித நலத்தையும், நேயத்தையும், மாண்பையும் பேணிக்காப்பதோடு, இவ்வுலகிலே அன்பையும், இரக்கத்தையும், அமைதியையும், நீதியையும், உண்மையையும் நிலைநாட்ட திருச்சபைக்கு பெரும் கடமையுண்டு என்று உலக மக்களுக்கு தொடர்ந்து உணர்த்தி வருகிறார் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் - அருள்பணி இம்மானுவேல் அமல்ராஜ், சலேசிய சபை

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.