2018-03-16 14:45:00

உரோம் பாப்பிறை கல்லூரிகளின் மாணவர்கள் சந்திப்பு


மார்ச்,16,2018. உரோம் நகரிலுள்ள பாப்பிறை கல்லூரிகள் மற்றும் திருஅவை நிறுவனங்களின் மாணவர்களை, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில், இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பு, கேள்வி பதில் முறையில் நடைபெற்றது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “தவக்காலம் ஒரு சாலையாகும். அது, அடிமைநிலையிலிருந்து விடுதலைக்கும், வேதனையிலிருந்து மகிழ்வுக்கும், மரணத்திலிருந்து வாழ்வுக்கும் இட்டுச் செல்கின்றது” என்ற வார்த்தைகளை, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இன்னும், இஸ்லாம் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (OCI) பொதுச்செயலர் Youssef A. Al Othaimeen அவர்களையும், அவரோடு சென்ற மேலும் இருவரையும், யூதமத ரபி René-Samuel Sirat, ஐ.நா. வின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தவர் அமைப்பின் (UNRWA) இயக்குனர் Pierre Krähenbühl அவர்களையும், இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைத்தந்தையை நோக்கி, இயேசு கற்றுக்கொடுத்த செபம் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிவி2000 என்ற தொலைக்காட்சிக்கு வழங்கிய சிந்தனைகளைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது, Penguin Random புத்தக வெளியீட்டு நிறுவனம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, ‘நம் இறைத்தந்தை : ஆண்டவரின் செபம் பற்றிய சிந்தனைகள்’ என்ற தலைப்பில், இப்புதிய நூலை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

ஆண்டவரின் செபம் பற்றி, திருத்தந்தை வழங்கிய சிந்தனைகளில், உலகெங்கும் நிலவும் சமூக நீதி மற்றும் பிறரன்பு குறித்த விவகாரங்களைக் குறிப்பிட்டு,  ஒருமைப்பாடு மற்றும் மன்னிப்பு குறித்து சிந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

டிவி2000 என்ற தொலைக்காட்சி, இத்தாலிய ஆயர் பேரவையால் நடத்தப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.