2018-03-16 15:07:00

பெண்கள், இரக்கத்தின் புரட்சியில் முன்னணியில் நிற்பவர்கள்


மார்ச்,16,2018. சமுதாயத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு, மலரச்செய்வதற்கு, அவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

 ‘பாலின சமத்துவத்தைப் பெறுவதில் சவால்களும், வாய்ப்புகளும் : கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகளின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் ஐ.நா.தலைமையகத்தில், நடைபெற்ற 62வது அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

தனிச்சிறப்புமிக்க பெண்மைப் பண்பின் வழியாக, பெண்கள், இரக்கத்தின் புரட்சியில் முன்னணியில் நிற்கின்றனர் என்றும், பெண்கள், குறிப்பாக, கிராமப்புற பெண்கள், வாழ்வையும், உறவுகளையும், கிராமப்புற சமூகங்களையும் காப்பதில் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர் என்றும், பேராயர் அவுசா அவர்கள், கூறினார்.

ஒருவர் ஒருவருக்குச் சேவையாற்றுவதில், மிகச் சிறந்தவர்கள் என்பதை, கிராமப்புற பெண்கள் தங்கள் நடவடிக்கைகளால் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், பெண்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்படுவது உட்பட, பொருளாதார அளவில், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும், தன் உரையில் வலியுறுத்தினார், பேராயர் அவுசா.

நிலம், தண்ணீர், விதைகள், சட்டமுறையான ஒப்பந்தங்கள், உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு வசதிகள், நிதியுதவி போன்றவை கிடைப்பதற்கு வழிசெய்யப்பட வேண்டும், தாய்மைக்கு ஆதரவளிக்கப்படுவதன் வழியாக, பெண்களின் உடல்நலம் காக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா.வில் கூறினார், பேராயர் அவுசா.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.