2018-03-16 15:19:00

பேரிடர்களால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பு


மார்ச்,16,2018. வறட்சி, வெள்ளம், விலங்குகளுக்கு நோய், நோயைக்கொணரும் பூச்சிகள், வேதியப் பொருள்களின் தேக்கம் போன்றவை, வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான டாலர் பெறுமான இழப்பை ஏற்படுத்துகின்றன என்று, FAO எனப்படும், ஐ.நா.வின் வேளாண் நிறுவனம், தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேளாண்மை, அறுவடை, காடுகள், மீன்வளர்ப்பு, நீர்வளப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வேளாண் துறைகள், காலநிலை மாற்றம், நோய்கள், சந்தை நிலவரம், ஆயுத மோதல்கள் போன்றவைகளால் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன என்று, அவ்வறிக்கையை வெளியிட்ட, FAO இயக்குனர் José Graziano da Silva அவர்கள் கூறினார்.

வறட்சியே, உலகில் விவசாயிகள் மிகவும் துன்புறுவதற்கு, முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும், இது, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய பகுதிகளில் பெரிய பேரிடராக உள்ளது என்றும் கூறியுள்ளது அவ்வறிக்கை.

விலங்குகளுக்கு ஏற்படும் நோய் மற்றும், அறுவடைகளைப் பூச்சிகள் சாப்பிடுவதால், ஆப்ரிக்க விவசாயிகள், 600 கோடி டாலருக்கு மேற்பட்ட இழப்பை எதிர்கொள்கின்றனர் என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.