2018-03-16 15:03:00

மார்ச்17, புனித பாத்ரே பியோ திருத்தலத்தில் திருத்தந்தை


மார்ச்,16,2017. புனித பாத்ரே பியோவின் பாதங்கள் பதிந்த, இத்தாலியின் Pietrelcina, San Giovanni Rotondo ஆகிய இடங்களுக்கு, மார்ச்,17, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார்.

Pietrelcinaவில், இச்சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு கெலிகாப்டரில் சென்றிறங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர் புனித பிரான்சிஸ் சிற்றாலயத்தில் சிறிது நேரம் செபிப்பார். பின்னர், அந்த ஆலயத்திற்கு முன்புறமுள்ள வளாகத்தில் அமைந்துள்ள பெரிய அறையில் விசுவாசிகளைச் சந்திக்கும் திருத்தந்தை, Pietrelcinaவிலுள்ள கப்புச்சின் துறவு சபை குழுமத்தையும் சந்திப்பார்.

அதன்பின்னர் அங்கிருந்து San Giovanni Rotondo நகருக்கு, காலை 9.30 மணியளவில் செல்லும் திருத்தந்தை, "துன்புறுவோர் துயர் துடைக்கும்" என்ற பெயரிலுள்ள மருத்துவமனையைப் பார்வையிடுவார். பின்னர், அந்நகரின் அன்னை மரியா திருத்தலம் சென்று கப்புச்சின் துறவியர் குழுமத்தைச் சந்தித்து, ஐந்து காய வரம் பெற்றிருந்த, புனித பாத்ரே பியோ அவர்களின் உடலுக்கும், திருச்சிலுவைக்கும் மரியாதைச் செலுத்தி செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

அதன்பின்னர், புனித பாத்ரே பியோ ஆலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, பிற்பகல் 2 மணியளவில், வத்திக்கான் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனித பாத்ரே பியோ அவர்களின் உடலில் திருக்காயங்கள் தோன்றியதன் 100ம் ஆண்டையும், அப்புனிதர் இறந்ததன் 50ம் ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை, இப்பயணத்தை மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணம், Benevento மறைமாவட்டத்திலுள்ள Pietrelcinaவுக்கும், Manfredonia-Vieste-San Giovanni Rotondo மறைமாவட்டத்திலுள்ள San Giovanni Rotondoவுக்கும், திருத்தந்தையின் மேய்ப்புப்பணி  பயணமாக அமைந்துள்ளது.

1887ம் ஆண்டு மே 25ம் தேதி, Pietrelcinaவில் பிறந்த, கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த புனித பாத்ரே பியோ அவர்கள், 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, San Giovanni Rotondoவில் காலமானார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பாத்ரே பியோ அவர்களை, 2002ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதியன்று புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.