2018-03-17 15:31:00

கத்தோலிக்க மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்


மார்ச்,17,2018. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், அருள்சகோதரிகள் நடத்துகின்ற ஒரு கத்தோலிக்க மருத்துவமனையும், அருள்சகோதரிகளும் தாக்கப்பட்டது குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

இவ்வாரத்தில், உஜ்ஜய்ன் நகரில், கும்பல் ஒன்று, 44 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் புஷ்பா மறைப்பணி மருத்துவமனைக்கு முன்புறமுள்ள நிலம், தங்களில் ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லி, அம்மருத்துவமனையின் சுவர்களைத் தகர்த்து, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு நுழையும் வாயிலையும் அடைத்துள்ளது.

அடுத்த அறிக்கை வரும்வரை, சர்ச்சைக்குரிய இடத்தில் வேறெந்த நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது என்று, நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாக, காவல்துறை தலைவர் Neeraj Pandey அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

ஏறத்தாழ அறுபது பேர் அடங்கிய கும்பல், பெரிய இயந்திரங்களைக் கொண்டு சுவர்களைத் தகர்த்தபோதும், அதைத் தடுக்கவந்த அருள்சகோதரிகள் உட்பட, மருத்துவமனை பணியாளர்கள் தாக்கப்பட்டபோதும், காவல்துறை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைக் குறைகூறியுள்ளனர் ஆயர்கள்.

போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, உஜ்ஜய்ன் ஆயர் சாக்கோ தொட்டுமரிக்கல், ஆயர் மஸ்கரீனஸ் ஆகிய மூவரும், அம்மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.