2018-03-17 15:22:00

சிரியாவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர்


மார்ச்,17,2018. சிரியாவில் எட்டாவது ஆண்டாகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும்  உள்நாட்டுப் போரில், 24 மணிநேரத்தில் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, அங்கிருந்து ஒரே நாளில் ஏறத்தாழ 30,000 பேர் வெளியேறினர். கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரியா அரசுப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து, ஏறத்தாழ 20,000 பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஏறத்தாழ 50,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியாவின் கிழக்கு கூட்டா நகரில், 70 விழுக்காட்டுப் பகுதியை, புரட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக, சிரியா அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக இரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிரியா இராணுவமும் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : தினகரன் /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.