2018-03-17 15:30:00

சிறுமிகள், சிறுவரின் கல்வி உரிமைக்காக திருப்பீடம்


மார்ச்,17,2018. சிறுமிகளும் சிறுவர்களும் தங்களின் முன்னேற்றத்தில் மாண்புடன் வளரவேண்டுமெனில், கல்வி கற்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை செயல்படுத்தப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

‘கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஒருங்கிணைந்த கல்வி’ என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில், நடைபெற்ற 62வது அமர்வில், இவ்வாரத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் பணியாற்றும் திருப்பீட பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

2030ம் ஆண்டின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டத்தில், அனைத்துச் சிறாருக்கும், குறிப்பாக, பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்ற 12 கோடிச் சிறாருக்கும், மிகவும் தரம்குறைந்த கல்வியைப் பெறும் 13 கோடிக்கு மேற்பட்ட சிறாருக்கும் கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்,  பேராயர் அவுசா.

இச்சிறாருக்கு, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இலவச, தரமான மற்றும் சமத்துவ கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், கத்தோலிக்கப் பள்ளிகள், கல்வித் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் உற்சாகமாக எடுத்துரைத்தார்.

உலக அளவில், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள 6 கோடியே 80 இலட்சம் இருபால் மாணவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் கத்தோலிக்கப் பள்ளிகள் கல்வி அளிக்கின்றன எனவும் பேராயர் ஐ.நா.வில் கூறினார்.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.