2018-03-17 15:22:00

மனித, ஆன்மீக உருவாக்குவதலில் கவனம் செலுத்த அழைப்பு


மார்ச்,17,2018. “மண்ணில் விழுந்து மடிந்து வாழ்வளிக்கும் கோதுமை மணி போன்று, இயேசு தம்மை ஆக்கினார். அந்த அன்பால் நிறைந்த வாழ்விலிருந்து நம் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது” என்ற சொற்களை, இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும்,  தூய ஆவியாருக்கு எப்போதும் திறந்த மனம் உள்ளவர்களாய், மனித மற்றும், ஆன்மீக உருவாக்குதலில், தொடர்ந்து கவனம் செலுத்துமாறு, உரோம் நகரில் பயிலும் குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்பணியாளர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் பாப்பிறை இறையியல் கல்லூரிகள் மற்றும், திருஅவை நிறுவனங்களில் படிக்கும், குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்பணியாளர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அவர்கள் கேட்ட ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்கையில், இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓர் அருள்பணியாளர் தாழ்மையான சீடராகவும், அதேநேரம் மறைப்பணியாளராகவும் எவ்வாறு இருக்க முடியும் என, ஒரு ப்ரெஞ்ச் குருத்துவ மாணவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, பிறர் சொல்வதற்குச் செவிசாய்ப்பவராக, மக்களைச் சந்திப்பவராக வாழ்கின்ற அருள்பணியாளர், ஒருபோதும் தனிமையை உணரமாட்டார் என்று கூறினார்.

அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்ற பின்னரும், ஒருவர் தனது இறையழைத்தலை எவ்வாறு தெளிந்து தேர்வு செய்வது என, சூடான் நாட்டு குருத்துவ மாணவர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்ற, தெளிந்து தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

மறைமாவட்ட அருள்பணியாளரின் ஆன்மீகப் பாதைகள், அருள்பணியாளரின் நிரந்தர உருவாக்குதல், சமநிலை காத்தல் போன்ற கேள்விகளுக்கும், இச்சந்திப்பில் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.