2018-03-19 15:03:00

அர்ஜென்டீனா நாட்டு மக்களுக்கு திருத்தந்தையின் நன்றி மடல்


மார்ச்,19,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவடைந்ததையும், மார்ச் 19ம் தேதி தலைமைப்பணியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையும் அடுத்து, அர்ஜென்டீனா நாட்டு மக்கள் அனுப்பியிருந்த மடலுக்கு திருத்தந்தை நன்றி கூறி மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டின் தலைவர்கள் மட்டுமில்லாமல், மதம், கலாச்சாரம், தொழில் என்று அந்நாட்டின் பல்வேறு பின்னணியைச் சார்ந்தவர்கள் இணைந்து இம்மடலை அனுப்பியது குறித்து தான் மகிழ்வதாக திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய நாட்டைக் குறித்து தான் கொண்டிருக்கும் அன்பும், பற்றும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்றும், தன்னுடைய வயது மற்றும் உடல் சக்தி இவற்றால் ஒரு சில தவறுகள் இழைத்திருந்தால், அவற்றை தன் மக்கள் மன்னித்துவிட வேண்டும் என்றும் திருத்தந்தை தன் நன்றி மடலில் குறிப்பிட்டுள்ளார்.

நன்மைத்தனம், அழகு மற்றும் வாழ்வு என்ற பல உயரிய கொள்கைகளுக்கு, அர்ஜென்டீனா நாட்டு மக்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழவேண்டும் என்பதே தன் செபம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.