2018-03-19 15:19:00

ஓர் அலங்காரப் பொருள் அல்ல, சிலுவை


மார்ச்,19,2018. பலவேளைகளில் தவறான முறையில் பயன்படுத்தப்படும் சிலுவை, ஓர் அலங்காரப்பொருள் அல்ல, மாறாக, தியானித்து புரிந்துகொள்ள உதவும் ஒரு மத அடையாளம்' என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண வந்தபோது, ‘மானிட மகன் மாட்சிமைப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என இயேசு கூறி, தன் மரணம் பற்றி சுட்டிக்காட்டியதை எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறின் திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் மனித குலத்தின் வாழ்வு மற்றும் மீட்பின் ஆதாரமாகவும்,  உன்னத அன்பின் அடையாளமாகவும் விளங்கும் திருச்சிலுவை, இறைமகனின் மரணத்தின் மறையுண்மையை தன்னுள் கொண்டுள்ளது என்றார்.

இயேசுவின் காயங்களால் நாம் குணம் பெற்றோம் என்பதை மனதில் கொண்டவர்களாக, திருச்சிலுவையை நாம் எவ்வாறு நோக்குகிறோம் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதை ஒரு கலைப்பொருளாக பார்க்கிறோமா, அல்லது, நமக்குள்ளேயே உற்று நோக்கி, அதன் மறையுண்மையை புரிந்துகொள்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.

தன் மரணம் மற்றும் உயிர்ப்பைப் பற்றிக் கூறவந்த இயேசு, கோதுமை மணி என்ற உருவகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், நம் இன்றைய வாழ்வை இழந்தால்தான், புது வாழ்வைப் பெறமுடியும் என மேலும் கூறினார்.

தான் சனிக்கிழமையன்று பாத்ரே பியோ அவர்களின் திருத்தலத்திற்குச் சென்றபோது மக்கள் காட்டிய வரவேற்புக்கு தனிப்பட்ட முறையில் நன்றிகூறுவதாகவும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.