2018-03-20 16:24:00

தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் மறுசுழற்சிமுறை தீர்வு


மார்ச்,20,2018. உலகில் 2050ம் ஆண்டுக்குள், 500 கோடிப் பேர், போதுமான தண்ணீர் வசதியைப் பெறுவதற்கு, இன்னல்களை எதிர்நோக்குவார்கள் என அஞ்சப்படும்வேளை, சீனாவின் மழைநீர் மறுசுழற்சிமுறை, இந்தியாவின் காடுகள் வளர்ப்பு, உக்ரேய்ன் நாட்டின் செயற்கை சதுப்புநிலங்கள் போன்ற, இயற்கையை அடிப்படையாக் கொண்ட தீர்வுகள், தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முக்கியமானவைகளாக மாறி வருகின்றன என்று ஐ.நா. கூறியுள்ளது.

மார்ச் 22, வருகிற வியாழனன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படும்வேளை, பிரேசிலில் நடைபெறும் தண்ணீர் தொடர்புடைய உலக நிகழ்வையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு, காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்கள், தண்ணீர் பாதுகாப்பிற்குச் சவால்களை முன்வைத்துள்ளவேளை, தண்ணீரை நிர்வகிப்பதற்கு புதிய தீர்வுகள் தேவைப்படுகின்றன என்று, யுனெஸ்கோ இயக்குனர் Audrey Azoulay அவர்கள் கூறினார். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லையெனில், 2050ம் ஆண்டுக்குள், ஏறத்தாழ 500 கோடிப் பேர், தண்ணீர் கிடைக்காத இடங்களில் வாழ நேரிடும் என்று, 2018ம் ஆண்டின் ஐ.நா. தண்ணீர் முன்னேற்ற அறிக்கையில் எச்சரித்துள்ளார், Azoulay.

காலநிலை மாற்றத்தால், ஈரப்பகுதிகள், மேலும் ஈரம் நிறைந்த பகுதிகளாகவும், வறண்ட பகுதிகள் மேலும் வறண்ட பகுதிகளாகவும் மாறி வருகின்றன. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப் பேர், அதாவது 360 கோடிப் பேர், ஆண்டில் குறைந்தது ஒரு மாதமாகிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.    

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.