2018-03-20 16:35:00

மரண தண்டனைக்கு எதிராக இந்திய திருஅவை


மார்ச்,20,2018. இந்தியாவில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துவரும்வேளை, அதை ஒழிக்கும் நோக்கத்தில், இக்கொடுமையை இழைக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்மானத்திற்கு, இந்திய திருஅவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 20, இச்செவ்வாயன்று, ஹரியானா மாநிலம், இக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதைச் சட்டமாக்கியுள்ளது. இந்தியாவில், கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறு சட்டமாக்கியுள்ள மூன்றாவது மாநிலமாக ஹரியானா உள்ளது. இது குறித்து பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் இம்மாநிலத்தில், பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்கு, இச்சட்டம் வலுவான கருவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை சட்டம் குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், இக்குற்றத்தை ஒழிப்பதற்கு, பாலியல் கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு காரணங்களால் இடம்பெறும்வேளை, இத்தகைய சட்டம் இயற்றுவது பயனுள்ளதாக இருக்காது என்றும் கூறியுள்ளார், பேராயர் லியோ கொர்னேலியோ.

மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரு நாளைக்கு 14 வீதம், 2016ம் ஆண்டில், 4,882 பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன. இம்மாநிலத்தில், கடந்த டிசம்பரில், இக்குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்தியாவில், 2016ம் ஆண்டில், 38,947 பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஏறத்தாழ எட்டாயிரம் பேர், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்று மத்திய அரசின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.