2018-03-21 16:33:00

இந்தியப் பிரதமரைச் சந்தித்த கர்தினால் கிரேசியஸ்


மார்ச்,21,2018. பெருமை மிகுந்த இந்திய நாட்டை கட்டியெழுப்பும் பணியில், இந்திய கத்தோலிக்கர்கள், அரசுடன் இணைந்து பணியாற்றுவர் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூறினார்.

இந்திய ஆயர் பேரவையின் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மார்ச் 20, இச்செவ்வாயன்று பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த வேளையில், கல்வி, நலத்துறை, சமுதாய மேம்பாடு ஆகிய தளங்களில் இந்திய மக்களுக்கு கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் பணிகளை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்தகைய வன்முறைகளை அரசு சகித்துக்கொள்ளாது என்ற கருத்தை பிரதமர்  வெளியிட்டால், நாட்டில் அமைதியைக் கொணர அது உதவும் என்று குறிப்பிட்டார்.

சாதி, மதம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைத்து மக்களுக்கும் தான் பிரதமர் என்றும், மக்களின் நலவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை தன் பணிகளில் முதன்மையான இடம் வகிக்கின்றன என்றும், பிரதமர் மோடி அவர்கள், கர்தினால் கிரேசியஸ் அவர்களிடம் கூறியதாக இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.