2018-03-21 15:06:00

இமயமாகும் இளமை:மனதில் விழுந்த விதையை விருட்சமாக்கிய இளைஞர்


1859ம் ஆண்டு கோடையில், இத்தாலியின் Solferino எனுமிடத்தில், ப்ரெஞ்ச் பேரரசின்  உதவியுடன், Piedmont-Sardinia அரசுப் படைகளுக்கும், ஆஸ்ட்ரியப் பேரரசுக்கும் இடையே, இத்தாலியின் இரண்டாவது விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில், ப்ரெஞ்ச் பேரரசர் 3ம் நெப்போலியன் அங்கு இருந்தார். பிரான்சின் காலனியாக இருந்த அல்ஜீரியாவில், தொழில் தொடங்கியிருந்த, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவைச் சேர்ந்த இளையவர் ஒருவர், தனது தொழில் தொடர்பாக, நெப்போலியனைப் பார்ப்பதற்காக, Solferinoவுக்குச் சென்றார். அந்நாள், அதே ஆண்டு ஜூன் 24. அன்று மாலையில் அவர் சென்ற நேரத்தில், அந்தப் போர் உச்சநிலையில் இருந்தது. போரிடும் இருதரப்பினரும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்டிருந்தனர். இருதரப்பிலும், இருபதாயிரத்துக்கு மேற்பட்டோர் காயமுற்றும், இறந்துகொண்டிருந்தும், இறந்தும் இருந்த நிலையைக் கண்டார் அந்த இளையவர். ஆனால் இவர்களுக்கு உதவிசெய்வதற்கு மிகச் சிறிய அளவிலே முயற்சிகள் எடுக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த இளையவர், தான் வந்த வேலையை கைவிட்டு, அப்பகுதியின் குடிமக்களை, குறிப்பாக, பெண்களையும், சிறுமிகளையும் ஒன்று திரட்டி, அப்போரில் இறந்தோர், காயமுற்றோர் மற்றும் நோயுற்றோர் எல்லாருக்கும் உதவிகளைச் செய்தார். இவர்கள் எல்லாரும் நம் சகோதரர்கள் என்று சொல்லி, பாரபட்சமின்றி, எல்லாருக்கும் உதவிகள் செய்யத் தூண்டினார். அதற்குத் தேவைப்பட்ட பொருள்களை இவரே வாங்கினார். தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கினார். ப்ரெஞ்ச் படைகள் சிறை வைத்திருந்த ஆஸ்ட்ரிய மருத்துவர்களை விடுதலை செய்ய விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றார். இதற்குப்பின், போரில் காயமடையும் வீரர்களுக்கு, பணிபுரிய வேண்டுமென்ற ஆவல் இவரில் அதிகரித்தது. ஜெனீவா திரும்பிய இவர், தனது அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டார். பலரின் ஆதரவைத் திரட்டினார். இவ்வாறு உருவானதுதான் உலகளாவிய செஞ்சிலுவை சங்கம். அந்த இளையவர்தான் Jeane Henry Dunant.  தனது 26வது வயதில் தொழில் தொடங்கிய இவர், கல்லூரியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால், 21வது வயதில், படிப்பைக் கட்டாயமாகக் கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. 18வது வயதில், தர்மம் வழங்கும், ஜெனீவா அறக்கட்டளையில் இணைந்தார். 19வது வயதில், விவிலியத்தைப் படித்து, ஏழைகளுக்கு உதவுவதற்காக, இளையோரை ஒன்று சேர்த்து, ‘வியாழன் கழகம்’ என்ற ஓர் அமைப்பை ஆரம்பித்தார் Henry Dunant.

மனதில் விழும் சிறிய விதைகள் மக்கிப் போவதோ அல்லது விருட்சமாக வளர்வதோ ஒவ்வொருவரையும் பொருத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.