2018-03-21 16:18:00

இளையோர் உருவாக்கும் ஏடு, திருத்தந்தையிடம் வழங்கப்படும்


மார்ச்,21,2018. இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்திற்கு முன் தயாரிப்பாக, மார்ச் 19, இத்திங்கள் முதல், உரோம் நகரில் நடைபெற்றுவரும் இளையோர் சந்திப்பில் உருவாக்கப்படும் ஓர் ஏடு, திருத்தந்தையிடம் இஞ்ஞாயிறன்று வழங்கப்படும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலகின் பல நாடுகளிலிருந்து உரோம் நகரில் ஒன்று கூடியிருக்கும் இளையோர் பிரதிநிதிகள் உருவாக்கிவரும் இந்த ஏடு குறித்து பேசிய உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி (Lorenzo Baldisseri) அவர்கள், மார்ச் 25, குருத்து ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் 33வது உலக இளையோர் நாள் நிகழ்வுத் திருப்பலியின் இறுதியில், இந்த ஏடு, திருத்தந்தையிடம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

உலகின் பல நாடுகளில் வாழும் இளையோரின் பிரதிநிதிகளாக உரோம் நகரில் கூடியிருக்கும் 300க்கும் மேற்பட்ட இளையோர், இளையோரின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் இந்த ஏட்டின் வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர் என்று, கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் கூறினார்.

வருகிற குருத்தோலை ஞாயிறன்று, ஒவ்வொரு தலத்திருஅவையிலும் கொண்டாடப்படும் 33வது உலக இளையோர் நாள், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:30) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.