2018-03-22 14:34:00

இமயமாகும் இளமை – வேலைக்கு அர்த்தம் சொல்லும் கல்லூரி மாணவி


பொருளாதாரத்தில் துன்புறும் தங்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்கு, பல இளம் பெண்கள் சவாலான பணிகளை எடுத்துச் செய்து வருகிறார்கள். அந்த இளையவர் பட்டியலில் ஒருவராக உள்ள திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சண்முகப்பிரியா அவர்கள் செய்யும் பணி, அதற்கெல்லாம் ஒரு படி மேல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. திருப்பூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்துவரும், இருபது வயது நிரம்பிய சண்முகப்பிரியா அவர்கள், தனது தந்தைக்கு உதவியாக இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். தந்தை சின்னசாமி அவர்கள், நடத்தும் இறைச்சிக் கடையில், ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சியைக் நறுக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறார் சண்முகப்பிரியா. இந்த வேலை பற்றி இவ்வாறு சொல்லியுள்ளார், சண்முகப்பிரியா. பல ஆண்டுகளாக எனது தந்தை இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். எனது சகோதரரும் இதே வேலையைத்தான் செய்கிறார். எனது தந்தைக்கு உதவி செய்ய விரும்பி இந்த பணியை கடந்த இரு ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஆரம்பத்தில் இந்த வேலை சற்று சிரமமாக இருந்தாலும், தற்போது எளிதாகவே இருக்கின்றது. எனது தந்தைக்கு உதவி செய்வதால் மகிழ்ச்சி கிடைக்கிறது. எனது வேலையால் எனது கல்விச் செலவுக்கும் பணம் கிடைக்கிறது. என் உறவினர்கள் பலரும் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டாம் என்கிறார்கள். ஆனால் என் தந்தை எனது படிப்புக்கு உறுதுணையாக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் நான் இறைச்சிக் கடையில் பணியாற்றுவது தெரியும். பலரும் என்னை பாராட்டவே செய்கிறார்கள். நல்ல வேலையைத்தான் செய்கிறாய். எந்த பணியுமே தரம் தாழ்ந்ததோ, செய்யக் கூடாததோ இல்லை. மனசாட்சிக்கு உட்பட்டு எந்த வேலையையும் செய்யலாம்.

வேலை என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் சொல்லி, வேலையின் தரம் பாராமல், தந்தைக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையும் கல்லூரி மாணவி சண்முகப்பிரியா அவர்கள், வளரும் இளம் தலைமுறைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.

ஆதாரம் : தினமணி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.