2018-03-23 15:16:00

உயிரினங்கள் காப்புரிமைக்கு திருப்பீடம் எதிர்ப்பு


மார்ச்,23,2018. மனிதர் உட்பட, எல்லாவகை உயிரினங்களுக்கும் காப்புரிமை தேவையில்லை என்ற கூற்றுக்கு, திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் இவான் யுர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், WIPO எனப்படும் அறிவுச் சொத்து மற்றும், மரபணு திறன் சார்ந்த பொருள்கள், பாரம்பரிய அறிவு மற்றும் மரபுக் கலாச்சாரக் குழுவில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

மனித மரபணுக்கள், தன் இயல்பிலே, நிதிசார்ந்த ஆதாயத்தைக் கொணராதவை என்றும், உயிரினங்கள்மீது வைக்கப்படும் காப்புரிமைகளை திருப்பீடம் எதிர்க்கின்றது என்றும்,  பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

உயிரினங்கள்மீது வைக்கப்படும் காப்புரிமைகள், உயிரியல்தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக, சிலநேரங்களில் உதவக்கூடும் என்பது உண்மையாக இருந்தபோதிலும், மனிதக் குளோனிங் முறை குறித்த ஐ.நா. அறிக்கை வலியுறுத்தும் அறநெறிக்கூறுகள் பற்றியும் சுட்டிக்காட்டினார், பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.