2018-03-23 14:54:00

திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் சந்திப்பு


மார்ச்,23,2018. சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Matteo Fiorini, Enrico Carattoni ஆகிய இருவரையும், திருப்பீடத்தில், இவ்வெள்ளியன்று ஏறத்தாழ 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்புக்குப் பின்னர் தங்கள் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்திய இத்தலைவர்களிடம், சான் மரினோ குடியரசு மக்கள், விடாஉறுதியுடன் எதிலும் செயல்படக்கூடியவர்கள் என்று திருத்தந்தை பாராட்டினார். அதற்கு அத்தலைவர்கள், இது முற்றிலும் உண்மையே, நாங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், விடாஉறுதியுடன் செய்து முடிப்போம், அவ்வாறு இல்லையெனில், இக்குடியரசு, 1,700 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்க இயலாது என்று திருத்தந்தையிடம் தெரிவித்தனர்.

மேலும், திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்தனர், சான் மரினோ குடியரசின் தலைவர்கள்.

திருப்பீடத்துக்கும் சான் மரினோ குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், தலத்திருஅவை, பொது நலனுக்கு, குறிப்பாக, நலவாழ்வு, கல்வி போன்றவைகளுக்கு ஆற்றிவரும் பணிகள்  போன்றவை, திருப்தியாக இருப்பதாக இச்சந்திப்பில் பேசப்பட்டது என, திருப்பீட தகவல் துறை அறிவித்தது.

இன்னும் புலம்பெயர்ந்தவர், ஐரோப்பாவின் எதிர்காலம், சில பன்னாட்டு விவகாரங்கள் ஆகியவையும், இச்சந்திப்பில் இடம்பெற்றன என, திருப்பீட தகவல் துறை அறிவித்தது.

சான் மரினோ Captains Regent என்பவர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் நாட்டின் தலைவர் மற்றும் அரசின் தலைவராகச் செயல்படுவார்கள். புதிய தலைவர்களின் பணியேற்பு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் முதல் நாளில் இடம்பெறுகிறது. இந்நடைமுறை 1243ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வெள்ளியன்று திருத்தந்தையைச் சந்தித்த இத்தலைவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் முதல் தேதியன்று நிறைவடைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.