2018-03-24 15:58:00

குருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சென்ற ஞாயிறு சிந்தனையில் இரு ஊர்வலங்களைப் பற்றி குறிப்பிட்டோம். இவ்வாண்டு, மார்ச் 11,12  தேதிகளில், மும்பை மாநகரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி, 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, காந்தியடிகள் துவக்கிய உப்பு சத்தியாகிரக ஊர்வலம் என்ற இரு ஊர்வலங்களைக் குறித்து பகிர்ந்துகொண்டோம்.

குருத்தோலை ஞாயிறான இன்று, ஊர்வலங்களைப் பற்றி சிந்திக்க மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 24, இச்சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் இடம்பெற்ற ஊர்வலம் அது. அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும் துப்பாக்கி பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மாணவ, மாணவியர்.

இவ்வாண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச் செய்துள்ளது. "துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்த்துவரும் வயது முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து, இளையோர் இந்த ஊர்வலத்தை தலைநகர் வாஷிங்டனில் நடத்தியுள்ளனர்.

மற்றோர் ஊர்வலம், இந்தியாவின் பல மாநிலங்களில் வலம் வருகிறது. 'இராம இராஜ்ஜிய இரத யாத்திரை' என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த ஊர்வலம், அயோத்தியில் இராமர் கோவிலை எழுப்பும் சூளுரையுடன் துவக்கப்பட்டுள்ளது. இராம இராஜ்ஜியத்தை உருவாக்க, இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பதை இராமர் அறிந்தால், அவர் வேதனையடைவார். தன் தந்தையின் இராஜ்ஜியத்தில் அமைதி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தம்பிக்கு அரியணையை வழங்கிவிட்டு, காட்டுக்குச் சென்றவர் இராமர். அவரது பெயரைப் பயன்படுத்தி, மத உணர்வைத் தூண்டி, 'இராம இராஜ்ஜியத்தை' உருவாக்க முயலும் இந்த ஊர்வலத்தைக் கண்டால், இராமர் மீண்டும் காட்டுக்குச் சென்றிருப்பார் என்பது உறுதி.

தனி மனித, அல்லது, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலனை முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறைகளை வளர்த்துள்ளன. இந்த வன்முறைகள் நாடுவிட்டு நாடு பரவும் வேளையில் வெடிக்கும் போர்களில், மீண்டும் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. உயிரோடு போர்க்களம் செல்லும் ஆயிரமாயிரம் இளையோர், சடலங்களாக, அல்லது, நடைப்பிணங்களாகத் திரும்பிவரும் ஊர்வலங்களை இவ்வுலகம் இன்றும் கண்டுவருகிறது. இதற்கு மாறாக, மக்கள் நலனை மையப்படுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களை ஒருங்கிணைத்து, நம்பிக்கையை வளர்த்துள்ளன.

நம்பிக்கையை வளர்த்த ஓர் ஊர்வலத்தை இந்த ஞாயிறன்று நாம் கொண்டாட வந்திருக்கிறோம். குருத்தோலை ஞாயிறென நாம் கொண்டாடும் இந்த விழாவில், இயேசு எருசலேம் நகரில் அமைதியின் மன்னனாக நுழைந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.

போருக்குப் புறப்படும் மன்னன் குதிரை மீதும், சமாதானத்தைக் கொணரும் மன்னன் கழுதையின் மீதும் அமர்ந்து வருவது, இஸ்ரயேல் சமுதாயத்தில் நிலவிய மரபு. தான் அமைதியின் மன்னன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட, இயேசு ஒரு கழுதைக்குட்டியின் மீது அமர்ந்து எருசலேம் நகருக்குள் நுழைந்தார். எளிமையும், அமைதியும் கொண்ட மன்னராக இயேசு எருசலேமில் நுழைந்த குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடும் வேளையில், எளிமையையும், அமைதியையும் விரும்பும் தலைவர்கள் சமுதாயத்தை வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம். அதேவேளையில், சுயமாகச் சிந்திக்கும் திறன்படைத்த தொண்டர்களும், தனிமனிதத் துதி பாடாமல், மக்கள் நலனுக்காக உழைக்க முன்வரும் தொண்டர்களும், இவ்வுலகில் பெருகவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எதேச்சையாக, மானசீகமாக அவருக்குமுன் ஊர்வலமாக சென்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளியாக அமைந்தது!

குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவார நிகழ்வுகள் வழியே, நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர்கள் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசு, தன் கொடிய மரணத்தின் வழியே, கோடான கோடி மக்களுக்கு மீட்பைக் கொணர்ந்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, வத்திக்கானில் கூடிவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் மையக் கருத்தாக விளங்குவது, இளையோர். இந்த மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக குருத்தோலை ஞாயிறன்று, 33வது உலக இளையோர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. வானதூதர் கபிரியேல், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1: 30) என்று இளம்பெண் மரியாவிடம் கூறிய சொற்கள், இவ்வாண்டு கொண்டாடப்படும் உலக இளையோர் நாளின் விருதுவாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வாக்கில் காணப்படும் இரு பகுதிகளை சிறிது ஆழமாக ஆய்வுசெய்வது பயனளிக்கும். இளம்பெண் மரியாவிடம், 'அஞ்சவேண்டாம்' என்று கூறும் வானதூதர், அதே மூச்சில், 'கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்' என்றும் கூறியுள்ளார்.

இளையோரிடம், "அஞ்சவேண்டாம், துணிவு கொள்ளுங்கள்" என்று சொல்லும்போது, இளையோர் பெறவேண்டிய துணிவு, இறைவன் வழங்கும் அருளால் உருவாகவேண்டிய துணிவு என்பதையும் வலியுறுத்திக் கூறவேண்டும். ஏனெனில், இளையோரை துணிவுகொள்ளச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.

பொதுவாக, இளையோரைக் குறித்துப் பேசும்போது, 'இளம்கன்று பயமறியாது' என்று கூறுகிறோம். அவர்கள் துணிவுடன் செயலாற்றத் தூண்டும் வகையில், 'துணிந்தவனுக்கு, தூக்குமேடை பஞ்சுமெத்தை' போன்ற வீர வசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய கூற்றுகள், இளையோரிடையே உணர்வுகளைத் தூண்டி, அவர்களது, துணிவை, வீரத்தை, தவறான வழிகளில் வெளிப்படுத்த வழியாகின்றன.

பல வேளைகளில், இளையோர் கொண்டுள்ள துணிவு, அவர்களது அச்சத்தை, இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கும் போலியான துணிவாக வெளிப்படக்கூடும். புளோரிடா மாநிலத்தில், பள்ளியில் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட நிக்கோலஸ் குருஸ் (Nikolas Cruz) என்ற 19 வயது இளையவர், அப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர், வாழ்வில் சந்தித்த பல பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள விருப்பமின்றி, தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டார். இறுதியில், தன்னை வெளியேற்றிய பள்ளியின் மீது பழியைத் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தார். அவர் பழக்கப்படுத்திக்கொண்ட துப்பாக்கி, அவருக்கு, தவறான, போலியான துணிவைத் தந்தது.

இந்தக் கொடுமையால் தங்கள் நண்பர்களை இழந்த அந்தப் பள்ளி மாணவர்கள், தங்களை இந்த வேதனைக்கு உள்ளாக்கிய இளையவர் நிக்கோலஸ் மீது தங்கள் பழியைத் தீர்த்துக்கொள்ளாமல், துப்பாக்கி பயன்பாட்டைக் குறித்து கேள்விகள் எழுப்பும் தெளிவைப் பெற்றனர். அதன் விளைவாக, அவர்கள் பங்கேற்ற கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், அமெரிக்க சமுதாயத்தில், கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்துவிட்ட துப்பாக்கி கலாச்சாரத்தைக் கேள்வி கேட்கும் துணிவைப் பெற்றுள்ளனர். இது இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள அருள் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.    

 

பழிக்குப் பழி என்ற வெறியை இளையோரிடம் தூண்டி விடுவது எளிது. அரசியல் தலைவர்கள் பலரும், அரசியல் உலகில் அடியெடுத்துவைக்க நினைக்கும் பலரும், இளையோரின் துடிப்பையும், துணிவையும் தங்கள் சுயநலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதைக் கண்டு வேதனைப்படுகிறோம்.

இளையோர் உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று, தன்னலத் தலைவர்களால், தவறான வழிகளில் நடத்திச் செல்லப்படும் இளையோரை, இறைவன் தன் அருளால் நிறைத்து, அவர்கள் இவ்வுலகில் நன்மையை நிலைநாட்டும் துணிவைப் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

"இளையோர், நம்பிக்கை மற்றும் அழைத்தலைத் தேர்ந்து தெளிதல்" (Young People, the Faith and Vocational Discernment) என்ற மையக்கருத்துடன், அக்டோபர் மாதம் நிகழவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக சிறப்பாக செபிப்போம். அதேவண்ணம், 2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்காக செபிப்போம்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற விருதுவாக்குடன் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், அனைத்து இளையோரையும் செயல்வீரர்களாக, சிறப்பாக, இறைவனின் சொற்படி செயலாற்றும் வீரர்களாக உருவாக்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.