2018-03-24 16:13:00

தென் சூடானில், இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்துகிறது


மார்ச்,24,2018. தென் சூடான் நாட்டில், துன்புறும் மக்களுடன் இணைந்து, இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்திக்கொண்டிருப்பதாகவும், அந்நாட்டிற்கு திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, அம்மக்கள் மனங்களில் புது நம்பிக்கையை விதைக்கும் என்றும் கூறினார், அந்நாட்டு ஆயர், Paride Tabani.

தென் சூடான் பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தபின், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஆயர் Tabani அவர்கள் இவ்வாறு கூறினார்.

தென் சூடான் மக்களுக்கு இன்று தேவைப்படுவதெல்லாம், நம்பிக்கையும், குணப்படுத்துதலும், அமைதியுமே என்று கூறிய ஆயர் Tabani அவர்கள், இவற்றை, ஆயுதங்களால் பெறமுடியாது என்றும், அன்பு, மன்னிப்பு ஆகிய உணர்வுகளாலேயே பெறமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தென் சூடான் கிறிஸ்தவ பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, தங்கள் நாட்டில் துன்புறும் மக்களுக்கு அவசரகால, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதையும், அனைத்துலக நாடுகள் தலையிட்டு, அமைதியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக, ஆயர் Tabani அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் சூடான் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை இக்குழுவினர் முன்வைத்தனர் என்று, ஓய்வுபெற்ற ஆயர் Tabani அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகள் நடைபெற்றுவரும் வன்முறைகளால், 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்துள்ளனர் என்பதையும், ஆயர் Tabani அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.