2018-03-24 16:14:00

மார்ச் 24, மறைப்பணியில் மறைசாட்சிகள் - நினைவுநாள்


மார்ச்,24,2018. திருஅவையின் மறைப்பணியில் மறைசாட்சிகளாக உயிர் துறந்தோரின் நினைவுநாள் இச்சனிக்கிழமையன்று இத்தாலியில், "வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்திருப்பதால், அவர்கள் சிறையிலடைக்கப்படுவது, சித்திரவதைகள் செய்யப்படுவது, கொல்லப்படுவது, ஆகிய கொடுமைகள் இடம்பெற்றுவரும் சூழலில், இத்தகையத் துன்பங்களை அடைவோருடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த நாள் சிறப்பிக்கப்பட்டது.

விரைவில் புனிதராக உயர்த்தப்படவிருக்கும் சான் சால்வதோர் பேராயர் அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ (Oscar Romero) அவர்கள், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிய வேளையில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்நாளில் மறைப்பணி மறைசாட்சிகள் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

இத்தாலிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் இளையோர் மறைப்பணி அமைப்பு, 1993ம் ஆண்டு உருவாக்கிய இந்த நினைவு நாள், அனைத்து மறைசாட்சிகளின் நினைவாக செபம் மற்றும் உண்ணாநோன்பு நாளாக, மார்ச் 24ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.