2018-03-26 16:20:00

இமயமாகும் இளமை – ஒலிம்பிக் கனவோடு வாழும் இளையவர்


நாகை மாவட்டம், உக்கடை என்னும் சிறிய கிராமத்திலிருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு ஒலிம்பிக் வீரராக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஆர்.சி.கணேஷ். சீர்காழியில் உள்ள விவேகானந்தா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் கணேஷ், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டவர்களுக்கென நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில், தொடர் ஓட்டத்தில் 3ம் இடமும், 200 மீட்டரில் 4ம் இடமும் பிடித்துச் சாதித்துள்ளார். ஓட்டப்பந்தய வேகத்தில், உசேன் போல்டின் பதிவை முறியடிக்க வேண்டும், வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கங்களை அள்ளிவர வேண்டும் என்கிற கனவோடு தன்னை உருவாக்கி வருகிறார் கணேஷ். இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், தொலைக்காட்சியில், ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற எல்லா வீரர்களும் தங்கள் வெற்றியை, மிகுந்த மகிழ்ச்சியாகக் கொண்டாடியதைப் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகுதான், தானும் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இவருக்குள் உதித்துள்ளது. கணேஷ் படித்த பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டு விழா தினத்தன்று போட்டிகள் நடத்தி, விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது வழக்கம். இவரும் 6ம் வகுப்பிலிருந்து முயற்சி செய்து, 8ம் வகுப்பில்தான் தேர்வாகி இருக்கிறார். அந்த வருடம்தான் ஆசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்தப் பள்ளிக்குத் தடகளப் பிரிவு பயிற்சியாளராக வந்தார். அதற்குப் பிறகு கணேஷ் மாவட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறத் தொடங்கினார். அப்படியே சிறிது சிறிதாக, மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதால், இளைஞர் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில், இவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியிலேயும் அவருடைய சக போட்டியாளர்களைப் பார்த்துப் பயந்துள்ளார். அப்படிப் பயந்த எந்தப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றதில்லையாம். அப்போது கணேஷின் அப்பா, `நீ போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் இல்லை. வெற்றிக்காக உன்னுடைய சிறந்த முயற்சியைக் கொடுத்தால்மட்டும் போதும் என்று சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் நடந்த போட்டியில், அப்பா சொன்னதை மனதில் வைத்து ஓடி முதல் பரிசை வென்றுள்ளார் கணேஷ். பயம்தான் சாதிப்பதற்குத் தடையாக இருக்கின்ற முதல் எதிரி என்று சொல்லியுள்ள கணேஷ், தற்போது எந்தப் போட்டிக்கும் பயப்படுவதில்லையாம். படிப்பிலும் சிறந்து விளங்குகிறாராம் கணேஷ். உக்கடையில் சரியான பேருந்து வசதி இல்லாததால், இவரது குடும்பத்தினர், அந்தக் கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் தங்கியிருக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.