2018-03-26 17:03:00

சிலுவையில் அறையும் என்பதற்கு பதிலாக, குருத்து ஞாயிறு ஓசன்னா


மார்ச்,26,2018. இளையோர், முதியோர், புனிதர்கள், பாவிகள் என அனைவருக்கும் உரிய தன் அன்பை வெளிப்படுத்தி, இறைவன் இயேசு கிறிஸ்து உயிர் துறந்தார் என இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 25, குருத்து ஞாயிறன்று, உலகம் முழுவதும், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்பட்ட 33வது இளையோர் நாளையொட்டி, தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்து எருசலேமில் நுழைந்தபோது, அவர், மக்கள் மனங்களில் தூண்டிய மகிழ்ச்சி குறித்தும், பலரின் மனங்களில் எழுந்த கோபம் மற்றும் எரிச்சல் குறித்தும் எடுத்தியம்பினார்.

தங்கள் துன்பம் மற்றும் வலிகளுக்கான ஆறுதலை, இயேசுவில் கண்ட மக்கள், அவரை வாழ்த்திப்பாடி எருசலேமுக்குள் அழைத்துச் சென்றபோது, தங்களையே உயர்வாக எண்ணி, சட்டத்தின் பாதுகாவலர்களாகத் தங்களைக் கருதிவந்த கூட்டத்தினர், இதனால் எரிச்சலடைவதையும் காண முடிகின்றது என்றார் திருத்தந்தை.

இந்த மகிழ்ச்சிப்பாடல்களைத் தொடர்ந்து, எதிரிகளின் 'சிலுவையில் அறையும்' என்ற கூக்குரல்களையும் காணும்போது, மற்றவர்களின் பெயரைக் கெடுக்க எவ்வளவு தூரம் பொய் சாட்சியங்களுடனும், கதைகளுடனும் உண்மை நிலைகளை பரட்டிப்போட மனித மனங்கள் செயல்படுகின்றன என்பதைப் பார்க்கிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தற்பெருமை, வன்மை எண்ணங்கள் போன்றவற்றால் மற்றவர்களின் பெயரைக் கெடுக்கும்போது, நம்பிக்கை தகர்க்கப்படுகின்றது, கனவுகள் கொல்லப்படுகின்றன, மகிழ்ச்சி ஒடுக்கப்படுகின்றது, மனம் மூடப்பட்டு பிறரன்பு என்பது செயல்படாததாகின்றது எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை மௌனப்படுத்துவதற்கான சோதனை மக்களிடையே எப்போதும் இருந்தே வருகின்றன என்றார்.

இளையோரின் குரலை ஒடுக்குவதற்கும், அவர்களின் கனவுகளை தகர்ப்பதற்கும், அவர்கள் கேள்வி எழுப்பாத வண்ணம் அவர்களை மௌனமாக்குவதற்கும் நிறைய வழிகள் உள்ளன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அடக்குமுறைகளைப் புறந்தள்ளி, இன்றைய இளையோர், 'அவரை சிலுவையில் அறையும்' என்ற புனித வெள்ளியின் குரல்களை கைவிட்டு, குருத்து ஞாயிறின் 'ஓசன்னா' என்ற புகழ் ஓலத்தையே முழங்கவேண்டும்  என அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.