2018-03-26 16:30:00

வாரம் ஓர் அலசல் – இன்றைய வலிகள் நாளைய மாற்றமாக மலரும்


மார்ச்,26,2018. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் மார்ச் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற குளிர்கால மாற்றுத்திறனாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்துள்ளன. இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் ஒவ்வொருவர் வாழ்வும், இன்றைய வலிகள், வேதனைகள், நாளைய வாழ்வில், மாற்றமாக மலரும் என்பதையே உலகிற்கு உணர்த்துகின்றது. 26 வயது நிரம்பிய ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் Sean Pollard அவர்கள், snowboard போட்டியில் கலந்துகொண்டவர். முப்பது மாதங்களுக்கு முன்னர், இவர் பனியையே பார்த்தது கிடையாதாம். ஆனால் இவரின் உடல்நிலை இந்த விளையாட்டில் கலந்துகொள்ளச் செய்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில், எஸ்பெரான்ஸ் கடற்கரைப் பகுதியில், Wylie வளைகுடாவில் இரண்டு சுறா மீன்கள் இவரைக் கடித்ததில், இவர் தனது இடது கையையும், வலது காலையும் இழந்துள்ளார். பின்னர், ஒருநாள் இவர் தன் நண்பர்களோடு கானடா சென்ற சமயம், ஸ்னோபோர்டு விளையாட்டு பற்றி அறிந்து அதைக் கற்று, தற்போது தனது வேதனைகளை மாற்றுவழியில் மலரச் செய்து வருகிறார்.

பியாங்சாங் நகரில் நடந்த மாற்றுத்திறனாளர் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் கலந்துகொண்டவர் நார்வே நாட்டு Lena Schroeder. ஐஸ் ஹாக்கி விளையாட்டில் கலந்துகொண்ட 135 வீரர்களில் இவர் ஒருவர் மட்டுமே பெண். இந்த அணியில், இவர், “இரும்பு பெண்ணாக” வெளிப்பட்டார் என செய்திகள் கூறுகின்றன. நான் பெண் என்பதால், வலிமை குறைவுள்ளவராக எண்ணி, என்னை எளிதாக நடத்த வேண்டாம் என்று சொல்கிறார் Schroeder. பிறந்தபோதே spina bifida என்ற நோயால் தாக்கப்பட்டவர் இவர். அதாவது முதுகுத்தண்டுவடம் ஒன்றாக இணைக்கப்படாமல் ஏற்படும் குறையால் பிறந்த இவர், மாற்றுத்திறனாளர் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் கலந்துகொண்ட இரண்டாவது பெண் ஆவார். 15 வயது வரை அதிகமாக நடந்த தன்னால், சக்கர நாற்காலியில் அமர்வதையே ஏற்க முடியவில்லை என்கிறார் இவர். தற்போது 25 வயது நிரம்பிய இவர், ஆண்களோடு கடுமையாகப் போட்டிபோட்டு விளையாடி வருகிறார். இடுப்புக்கு கீழே செயலிழந்தவர்கள் விளையாடும் விளையாட்டு இது. இதில் தன்னை நிலைநிறுத்த மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்றும் சொல்கிறார், Schroeder.

நினைப்பதுபோல் எல்லாருக்கும் வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. அழகாய் அமைந்த வாழ்க்கையைக்கூட சிலருக்கு வாழத் தெரிவதில்லை. வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தைபோல் இரு, ஏனெனில், குழந்தைக்கு அவமானம் என்றால் என்னவெனத் தெரியாது. அது, விழுந்தவுடன் அழுது முடித்து, திரும்பவும் எழுந்து நடக்கும். வாழ்வில் ஜெயித்துக் காட்டும் மாற்றுத்திறன் உள்ளவர்களும், குழந்தைபோலவே கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் உடலிலும், உள்ளத்திலும் எதிர்கொண்ட வலிகளை, வருங்கால மாற்றமாக மலரச் செய்கின்றனர். வலிகளிலே முடங்கிக்கிடப்போருக்கும் கிரியா ஊக்கியாக இவர்கள் திகழ்கிறார்கள். ஒருமுறை, ஒரு தேனியைப் பார்த்து பறவை ஒன்று, ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம், நீ தேனைத் தயாரிக்கிறாய். ஆனால் மனிதர் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகின்றனர். அதற்காக நீ வருத்தப்படுவதில்லையா? எனக் கேட்டதாம். அதற்கு தேனி, புன்னகையுடன் சொன்னதாம். இல்லை. இல்லவே இல்லை ஏனென்றால் மனிதர் என்னிடமிருந்து தேனை மட்டும்தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை அவர்கள் ஒருபோதும் என்னிடமிருந்து திருட முடியாது. அதேபோல்தான், ஒருவரின் திறமை, தன்னம்பிக்கை, உழைப்பு போன்றவற்றை, அவரிடமிருந்து வேறு யாராலும் திருட முடியாது. 

யாரும் யாரிடமிருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஒருமுறை காந்திஜி அவர்களுக்கு, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களிடம் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது இராதாகிருஷ்ணன் அவர்கள், ஒரு பேராசிரியராகப் பணியாற்றினார். இராதாகிருஷ்ணன் அவர்களின் புலமை, தத்துவஞானம், எதனையும் புரிந்துகொண்டு விளக்கும் சொல்லாற்றல் ஆகியவற்றைக் கண்டு மகாத்மா வியந்து போனார். அப்போது காந்தியடிகள், இராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குக் கண்ணன் மாதிரி… நான் உங்களிடம் அர்ச்சுனனாகப் பாடம் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறினாராம். காந்திஜி அவர்களே, கண்ணன் என்று புகழ்ந்து பாராட்டிய தத்துவமேதை இராதாகிருஷ்ணன் அவர்கள், இத்தனைக்கும், காந்திஜியைவிட பதினேழு வயது இளையவர். எனவே விடய ஞானங்களைக் கற்றுக் கொள்வதிலும், அவற்றில் தேர்ச்சி பெறுவதிலும், வயது என்பது தடையல்ல. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையும், கற்றுத் தேர்வதில் ஈடுபாடும் அக்கறையும்தான் மிக முக்கியம். இத்தகைய உணர்வு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாணவப் பருவத்திலேயே இருந்ததாம். இதுதான் அவரைப் புகழின் உச்சிக்குப் கொண்டு சென்றது எனச் சொல்லப்படுகின்றது.

மாற்றுத்திறன் கொண்டவர்களோ, குழந்தைகளோ, யாரிடமிருந்து எங்கிருந்து நல்லவை வந்தாலும், அதனைக் கற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். ஆனால் மனிதரை முன்னேறவிடாமல், குழந்தைப் பருவத்திலே முடக்கப்படும் நிலைகளும் நம் சமூகங்களில் நிலவுகின்றன. அப்பா வாங்கிய ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக, மகன் ஒருவன் இருபது ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளான். அந்த மகனின் குழந்தைப் பருவம் மின்வேலிக்குள் முடிந்தது என, ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்தியாவில், கொத்தடிமைத் தொழில்முறை, சட்ட விரோதமானது என்று, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், இது நாடு முழுவதும் இலட்சக்கணக்கானவர்களைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. அநேக நேரங்களில் பாதிக்கப்படுகிற குழந்தைகள், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள் போன்ற பணியிடங்களில் பிறந்து, அவர்களது பெற்றோர்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் வேலை செய்தே கழிக்கின்றனர்.

தமிழ் நாட்டிலுள்ள ஒர் அரிசி ஆலையில் பிறந்து, அவருடைய சகோதரருடன் சேர்ந்து வளர்ந்த அப்பு என்ற சிறுவனின் வாழ்க்கைக் கதையும் இப்படித்தான் இருந்தது. இவனுடைய தந்தை வாங்கிய கடன் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே. இருப்பினும், இந்தக் கடனை அடைப்பதற்குப் பல ஆண்டுகளாக அப்பு வேலை செய்ய வேண்டியிருந்தது. இப்போது, அப்புவின் மகனும், அவரைப் பின்பற்றி அங்குத் தொடர்ந்து வேலை செய்து வருகிறான் என்று சொல்லப்படுகின்றது. அப்பு, அவருடைய குழந்தை பருவத்தை நினைத்துப்பார்க்கும்போது, அரிசி ஆலையில் வேலை செய்தது மட்டுமே அவரது நினைவில் இருக்கின்றது. மற்ற பிள்ளைகளைப்போல பள்ளிக்கூடம் செல்வதற்கோ அல்லது நண்பர்களுடன் விளையாடுவதற்கோ அப்புவுக்கு நேரம் இருந்ததில்லை. சிறுவனாக இருந்தபோதும், ஒரு நாளைக்கு 18 மணிநேரம் அரிசி மூட்டைகளை அப்பு சுமந்திருக்கிறார். அவருடைய தந்தை இறந்தபிறகும்கூடத் தனது தந்தையின் கடனை அடைப்பதற்கு, தொடர்ந்து வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அடிக்கடி மிக மோசமாக நடத்தப்பட்டதுடன், அரிசி ஆலையைவிட்டு வெளியே செல்வதற்கும் அப்புவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 19, கடந்த திங்களன்று வெளியான ஒரு செய்தியில், ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என்று, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக இருந்தது.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், கடும் மன அழுத்தத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றும், காவலர்களுக்கு உரியமுறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டுமென்றும், 2012ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அது தொடர்பாக பெரிய நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் தற்கொலை செய்யும் போக்கு அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. காவலர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தரப்படும் அழுத்தமே, அப்பாவி பொதுமக்கள் மீதான கோபமாக மாறுகிறது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மனவலிகளும், வேதனைகளும் எந்தத் துறையில் பணியாற்றுகின்றவர்களையும் விட்டு வைப்பதில்லை. அவற்றை மாற்றுவதற்கு நிவாரணிகள் தேவைப்படுகின்றன. அதேநேரம், வேதனைதான் வாழ்க்கை என முடங்கிவிடாமல், சாதித்துக்காட்டும் மாற்றுத்திறனாளிகளை, பெரியோரின் பணிவான செயல்களை வாழ்க்கைப் பாடமாக ஏற்போம். இவ்வாரத்தில் இயேசுவின் சிலுவைப் பாடுகளைத் தியானிக்கின்றோம். சிலுவை மரணத்திற்குப் பின் உயிர்ப்பு உண்டு. எனவே இன்றைய வலிகள் நாளைய  மாற்றமாக மலரும் என நம்புவோம். மனவலிகளிலிருந்து மீண்டுவர முயற்சிகள் எடுப்போம்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.