2018-03-27 15:55:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 10


நான்கு நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தி, இறுதியாக வெளிவந்தது என்பது நாம் அறிந்த தகவல். இந்த நற்செய்தியில், இயேசுவின் வாழ்வும், போதனைகளும், வெறும் வரலாற்றுக் குறிப்புகளாக பதிவு செய்யப்படவில்லை; மாறாக, ஓர் இறையியல் பாடமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது, பல விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து. இயேசுவின் சீடர்களிலேயே மிகக் குறைந்த வயதுடையவராய் இருந்த யோவான், ஏனைய சீடர்களைப் போல் மறைசாட்சியாய் கொல்லப்படாமல், 90 வயதுக்கும் மேல் வாழ்ந்தார் என்பது, வரலாற்று குறிப்பு.

தான் இயேசுவுடன் வாழ்ந்த வாழ்வை, வயது முதிர்ந்த காலத்தில் அசைபோட்டு, யோவான் உருவாக்கிய நூலே அவரது நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இயேசுவின் வாழ்வு நிகழ்வுகளை யோவான் அசைபோட்டதுபோல், நாமும், இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளத்தை அசைபோட, இத்தேடலில் மீண்டும் முயல்வோம்.

யோவான் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள 20 பிரிவுகளை, இரு பகுதிகளாகப் பிரிக்க இயலும். முதல் 11 பிரிவுகள், "அரும் அடையாளங்களின் நூல்" (The Book of Signs) என்றும், 12 முதல் 20 முடிய உள்ள 9 பிரிவுகள், "மகிமையின் நூல்" (The Book of Glory) என்றும் அழைக்கப்படுகின்றன.

முதல் 11 பிரிவுகளில், இயேசு ஆற்றிய 7 அரும் அடையாளங்களை நற்செய்தியாளர் பதிவு செய்துள்ளார். தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது (யோவான் 2:1-11), அரச அலுவலர் மகனைக் குணமாக்கியது (4:43-54), 38 ஆண்டுகளாக நோயுற்றவரை குணமாக்கியது (5:1-15), ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்தது (6:1-14), தண்ணீர் மீது நடந்தது (6:16-21), பார்வையற்றவருக்கு பார்வை அளித்தது (9:1-34), மற்றும், இலாசரை உயிர்ப்பித்தது (11:17-44) ஆகியவை, யோவான் நற்செய்தியின் முதல் 11 பிரிவுகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகள்.

இந்த 7 அரும் அடையாளங்களில், 5000 பேருக்கு இயேசு உணவளித்த புதுமை, நான்கு  நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ளது. இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகளும், உயிர்ப்பிக்கும் புதுமைகளும் நான்கு நற்செய்திகளிலும் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கானா திருமண விருந்தில், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய 'முதல் அரும் அடையாளம்' (யோவான் 2:11), ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது, இயேசுவின் சீடர்களுக்கும், விருந்தில் உதவிகள் செய்த பணியாளருக்கும் மட்டுமே, தெரிந்திருந்தது என்பதை, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். "இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவான் 2:11) என்று நற்செய்தியாளர் யோவான், இந்தப் புதுமையை நிறைவு செய்துள்ளார்.

இந்தப் புதுமையின் நேரடியான நோக்கமும், தாக்கமும், சீடர்களிடம் நம்பிக்கையை உருவாக்குவது என்பதை, யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இயேசு ஆற்றிய அனைத்துப் புதுமைகளும், அவரது சக்தியைப் பறைசாற்றும் விளம்பரங்களாக அமையவில்லை, மாறாக, மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் தருணங்களாக அமைந்தன.

இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியவை என்று, Blair Van Dyke என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.

முதல் அம்சம் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றும் வல்லமை கொண்ட இயேசு, மரத்தை, பாறையாகவும், பாறையை, தண்ணீராகவும், தண்ணீரை, திராட்சை இரசமாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர் என்பதை, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார். மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும் அவரிடம் வல்லமை இருந்தது என்பதே, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்ளும் முதல் அம்சம்.

இரண்டாவது அம்சம் - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும். திராட்சை செடியை நட்டு, அது கோடியாக வளர்ந்து, கனிகள் தருவதற்கு, குறைந்தது, மூன்றாண்டுகள் ஆகும். அந்த கனிகளைப் பறித்து, சாறாகப் பிழிந்து, அதை திராட்சை இரசமாக மாற்றுவதற்கு, குறைந்தது, 3 மாதங்கள் தேவைப்படும். மிக உயர்ந்த தரமான திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும்.

எனவே, திராட்சை செடியில் துவங்கி, நல்ல, உயர்ந்த தரமான திராட்சை இரசம் உருவாக, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். ஆனால், கானா திருமணத்தில், இயேசு, நல்ல, உயர்தரமான திராட்சை இரசத்தை சில நொடிகளில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில் உருவாகும் திராட்சை இரசத்தை, ஒரு நொடியில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.

காலத்தை அளக்க நாம் பயன்படுத்தும், நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற அளவுகள், காலத்தைக் கடந்த கடவுளுக்கு இல்லை. இந்த எண்ணத்தை, திருத்தூதர் பேதுரு, தன் திருமுகத்தில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:

பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:8

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.

திருத்தூதர் பேதுரு இவ்வாறு கூறும்போது, அவர் உள்ளத்தில், திருப்பாடல் 90ல் கூறப்பட்டுள்ள வரிகள் எதிரொலித்திருக்கும்:

திருப்பாடல் 90:2,4

மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும், இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

படைக்கப்பட்ட பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் இயேசு கொண்டிருந்த அதிகாரம், அவர் ஆற்றியுள்ள குணப்படுத்தும் புதுமைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றது என்று பேராசிரியர் Van Dyke அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எடுத்துக்காட்டாக, படைக்கப்பட்ட மனித உடலில் உருவாகும் குறைகளை, நோய்களை இயேசு குணமாக்கும்போது, மனித உடல்மீது அவர் கொண்டுள்ள அதிகாரம் எளிதாக விளங்குகிறது. குறிப்பாக, படைப்பின் அடித்தளமான உயிர், உடலைவிட்டு பிரிந்துவிட்டாலும், அந்த உயிரை மீண்டும் உடலோடு இணைக்கும் சக்தி இயேசுவிடம் இருந்ததென்பதை, உயிர்ப்பித்த புதுமைகள் கூறுகின்றன.

ஒருவர் உடல் நலனை இழப்பதற்கு பல நாட்கள், அல்லது, பல ஆண்டுகள் ஆகலாம். அதேவண்ணம், அவரைக் குணமாக்க, மருத்துவமுறைப்படி, நாட்களோ, மாதங்களோ ஆகின்றன. ஒரு சில நோயுற்றவர்கள், இறுதிவரை, மருந்து, மாத்திரையுடன் தங்கள் எஞ்சிய நாட்களை கழிக்கவேண்டிய நிலையையும் நாம் அறிவோம்.

பல ஆண்டுகள் குறையுடன் துன்புற்றவரின் வாழ்வில், இயேசு, ஒரு சொல்லால், ஒரு செயலால், நொடிப்பொழுதில் உடல் நலனைக் கொணர்ந்தார். இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் இரண்டில், அந்த நோய் எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி 5ம் பிரிவில் கூறப்பட்டுள்ள நிகழ்வில், 38 ஆண்டுகளாக நோயுற்றவரை இயேசு குணமாக்கினார் என்றும், லூக்கா நற்செய்தி 8ம் பிரிவில், 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண்ணை இயேசு குணமாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளாக நோயுற்றிருந்தவர், இயேசு தந்த ஒரு கட்டளையால் குணமானார். 12 ஆண்டுகளாக நோயுற்றிருந்த பெண், இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டதால் குணமானார்.

படைப்பின் மீதும், காலத்தின் மீதும் அதிகாரம் கொண்ட இயேசு, அரச அலுவலர் மகனைக் குணமாக்கிய புதுமையில், அடுத்தவாரம், நம் தேடல் பயணத்தைத் துவங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.