சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ மன்றங்கள்

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இளையோர் உருவாக்கியுள்ள ஏடு

குருத்தோலை ஞாயிறு திருப்பலிக்குப்பின் அறிக்கையைக் கொடுக்கிறார் ஓர் இளையவர்

28/03/2018 15:31

மார்ச்,28,2018. இளையோர் இன்று சந்திக்கும் சவால்களும், வாய்ப்புக்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழல்களுக்குத் தகுந்ததுபோல் மாறினாலும், அவற்றில் பொதுவான அம்சங்கள் பல உள்ளன என்று, உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இளையோர் உருவாக்கியுள்ள ஓர் ஏட்டில் கூறியுள்ளனர்.

இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, உலகின் பல நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டிருந்த 300க்கும் அதிகமான இளையோர், மார்ச் 19, கடந்த திங்கள் முதல், 24, கடந்த சனிக்கிழமை முடிய, உரோம் நகரில் மேற்கொண்ட ஒரு சந்திப்பின் முடிவில், இவ்வேடு உருவாக்கப்பட்டிருந்தது.

தாங்கள் உருவாக்கியுள்ள ஏடு ஓர் இறையியல் கொள்கை திரட்டு அல்ல என்றும், ஆயர்கள் மேற்கொள்ளும் விவாதங்களில் உதவியாக இருக்கும் ஒரு வழிகாட்டி என்றும் இளையோர், இந்த ஏட்டின் முகவுரையில் கூறியுள்ளனர்.

இன்றைய உலகில் இளையோரின் சவால்களும், வாய்ப்புக்களும்; நம்பிக்கை மற்றும் அழைப்பு, தேர்ந்து தெளிதலும், உடன் வருதலும்; திருஅவையின் உருவாக்கும், மேய்ப்புப்பணி செயல்பாடுகள் என்ற மூன்று பகுதிகளில் இளையோரின் எண்ணங்கள்  தொகுக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருஅவை, குறிப்பாக, அதன் அதிகார அமைப்புக்கள், வெளிப்படையாக, நடுநிலையோடு, வரவேற்கும் பண்போடு, மகிழ்வோடு, நெருங்கிவரச் செய்யும் இயல்போடு செயலாற்ற வேண்டும் என்பதையே இளையோர் விரும்புகின்றனர் என்று, இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.

திருஅவையின் உறுப்பினர்களால் விளைந்துள்ள குற்றங்கள், அவதூறுகள் ஆகியவை இளையோர் உள்ளங்களில் நம்பிக்கையைக் குலைத்தாலும், திருஅவை மீது இன்னும் ஆழ்ந்த பற்றுகொள்ள இளையோர் விழைகின்றனர் என்று இவ்வேடு சுட்டிக்காட்டுகிறது.

பலமற்றதாக, காயமுறக்கூடியதாக தன்னை வெளிப்படுத்த அஞ்சாத திருஅவையே, நம்பிக்கைக்குரிய திருஅவையாக இருக்கும் என்ற கருத்தை, இளையோர் இந்த ஏட்டில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

உரோமையில் கூடியிருந்த 300க்கும் அதிகமான இளையோரும், வலைத்தளங்கள் வழியே உலகெங்கிலுமிருந்து தொடர்பு கொண்ட 15,300 இளையோரும் இணைந்து மேற்கொண்ட விவாதங்களின் முடிவில், இந்த ஏடு உருவாக்கப்பட்டுள்ளது.

"இளையோர், நம்பிக்கை மற்றும் அழைத்தலை தேர்ந்து தெளிதல்" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முன் தயாரிப்பாக, இளையோர் உருவாக்கியுள்ள இந்த ஏடு, மார்ச் 25, குருத்தோலை ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியின் இறுதியில், திருத்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/03/2018 15:31