சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித ஜெரோம் பாகம் 2

புனித ஜெரோமின் நண்பராக இருந்த சிங்கம் - RV

28/03/2018 14:57

மார்ச்,28,2018. Eusebius Sophronius Hieronymus எனும் இயற்பெயரைக்கொண்ட புனித ஜெரோம், ஓர் அருள்பணியாளர், மறைவல்லுனர், இறையியலாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர். இவர், கி.பி.347ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, தால்மாஷியா எல்லையிலுள்ள எமோனாவுக்கு அருகில், ஸ்த்ரிதோன் எனப்படும் கிராமத்தில் பிறந்தார். தால்மாஷியா, தற்போதைய குரோவேஷிய குடியரசில் உள்ளது. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த புனித ஜெரோம், சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியைக் கற்ற பின்னர், உயர் கல்விக்காக, ஏறத்தாழ 360ம் ஆண்டில் உரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். இவர், உரோம் நகரில், இலத்தீனையும், கிரேக்கத்தையும் கற்றார். உரோமையில் கல்வி பயின்ற காலத்தில், ஒரு மேலோட்டமான வாழ்வில் ஈடுபட்டு, அறநெறி வாழ்விலும் முறைதவறி நடந்தார். அந்நேரங்களில் தன் மனச்சாட்சியை சாந்தப்படுத்துவதற்கு, உரோம் நகரிலுள்ள அடிநிலக் கல்லறைகளுக்குச் சென்று, திருத்தூதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் கல்லறைகளைத் தரிசித்தார் மற்றும், ஞாயிறு திருப்பலிகளில் பங்கு கொண்டார். நெறிபிறழ்ந்த தனது வாழ்வு பற்றி பின்னாளில் இவ்வாறு எழுதியுள்ளார், புனித ஜெரோம்.

அச்சமயத்தில், நரகத்தின் பயங்கரத்தை அனுபவித்தேன். பூமியின் ஆழத்தில், இருளடர்ந்த குகைகளில் என்னைக் கண்டேன். அக்குகையின் இருபக்கங்களிலும், இறந்த உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுவர்கள் இருந்தன. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒளியானது, சன்னல்கள் வழியாக நுழையாமல், அங்குமிங்கும் கண்ணாமூச்சு காட்டி, இருளின் கொடூரத்தை வெளிப்படுத்தின. அந்தக் குகையில், முன்னே செல்கையில், இரவின் காரிருள் சூழ்ந்து எனது மனதைக் கவ்வின.

எல்லாப் பக்கங்களிலும் இருள் பரவியிருந்தது. அந்த அமைதியே எனது ஆன்மாவின் மீது பயங்கரத்தை மூச்சுவிட்டது என, நரகத்தின் பயங்கரத்தை விவரிப்பதற்கு, விர்ஜில் கூறியதையும், புனித ஜெரோம் அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார். உரோமையில் படிக்கும்போது, ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை, ஒருவித சந்தேகத்துடனே நோக்கினார். நாளடைவில் கிறிஸ்தவத்தை ஏற்று, திருமுழுக்கும் பெற்றார். உரோம் நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், Bonosus என்ற தன் நண்பருடன் முதலில் Gaul சென்றார். பின்னர், Trier நகர் சென்று இறையியல் கற்றார். பின்னர் தன் நண்பர்களுடன், ஆசியா மைனர் வழியாக, சிரியாவின் வட பகுதிக்குச் சென்றார் அவர். அந்தியோக்கியாவில் நீண்ட காலம் தங்கினார். அங்கு அவரின் இரு நண்பர்கள் இறந்தனர். புனித ஜெரோம் அவர்களும் ஒருமுறைக்கு மேல், கடின நோய்வாய்பட்டார். 373 மற்றும் 374ம் ஆண்டுக்கு இடைப்பட்ட குளிர் காலத்தில், இவர் நோயுற்று இருந்தபோது, ஒரு காட்சி கண்டார். அதன் விளைவாக, உலகம் சார்ந்த கல்வியில் கவனம் செலுத்துவதை நிறுத்தி, இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தார். Laodiceaவின் அப்பலோனியாரின் தூண்டுதலின்பேரில் விவிலியத்தைக் கருத்தூன்றி படிக்கத் தொடங்கினார். அந்தியோக்கியாவில் விவிலியம் கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார் புனித ஜெரோம்.    

கடும் தவ வாழ்வில் அதிக ஆர்வம் எழவே, புனித ஜெரோம், அந்தியோக்கியாவின் தென்கிழக்கே, "Syrian Thebaid" எனப்படும், Chalcis பாலைவனம் சென்றார். அச்சமயத்தில் அவருக்கு வாசிக்கவும் எழுதவும் அதிக நேரம் கிடைத்தது. கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய யூதரின் உதவியுடன் எபிரேயம் கற்றார். அந்தியோக்கியாவிலிருந்த யூதக் கிறிஸ்தவர்களுடன் தொடர்புகொண்டு, எபிரேய மொழியில் எழுதப்பட்ட நற்செய்தி நூலைப் பெற்றார். எபிரேயர்களின் நற்செய்தி எனப்படும் இந்நூலின் சில பகுதிகளை, இப்புனிதர், கிரேக்கத்தில் மொழி பெயர்த்தார். ஏறத்தாழ 379ம் ஆண்டில் அந்தியோக்கியா திரும்பிய இவர், ஆயர் பவுலினுஸ் என்பவரால், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் மீண்டும் தவவாழ்வைத் தொடர்ந்தார் புனித ஜெரோம். பின்னர், கான்ஸ்தாந்திநோபிள் சென்று, புனித நாசியான் கிரகரி அவர்களிடம் விவிலியம் கற்றார். அங்கு ஈராண்டுகள் கற்றபின் மீண்டும் உரோம் வந்தார். திருத்தந்தை முதலாம் தமாசுஸ் அவர்களுக்குச் செயலராகப் பணியாற்றி, உரோம் கிறிஸ்தவர்களை வழிநடத்தினார். அந்தியோக்கியாவின் பிரிவினைக்கு முடிவு காண்பதற்காக 382ம் ஆண்டில் பொதுச்சங்கம் நடைபெற்றது. புனித ஜெரோம் அவர்களும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தார். உரோமையில் பல பணிகள் இவருக்குக் கொடுக்கப்பட்டன. உரோமையில் பணக்கார மற்றும் நன்கு கல்விகற்ற பெண்கள் குழு இவரைப் பின்பற்றியது. திருத்தந்தை முதலாம் தமாசுஸ் அவர்கள் இறந்தபின்னர், உரோம் நகரில், புனித ஜெரோம் அவர்களின் இறையியல் சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் அவர் உரோம் நகரிலிருந்து பெத்லகேம் சென்றார். அவருடன் அந்தப் பெண்கள் குழுவும் சென்றது. பெத்லகேமில், துறவு இல்லத்தில், துறவியாக வாழ்ந்தார் இவர்.  அங்குதான், விவிலியத்தை, எபிரேயம், அரமேயம் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக இலத்தீனில் மொழி பெயர்த்தார். புனித ஜெரோம், கி.பி.420ம் ஆண்டு செப்டம்பர் 30ம் நாள் காலமானார். இவரது உடல் முதலில் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ள புனித மரியா பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. விவிலிய அறிஞர்கள், நூலகங்கள், நூலகப் பணியாளர்கள், மாணவர்கள் போன்றோரின் பாதுகாவலராக விளங்குகிறார், புனித ஜெரோம்.

புனித ஜெரோம் அவர்கள், முதிர்ந்த வயதில் ஒரு கிறிஸ்துமஸ் இரவில், பெத்லகேமில் சேசு பிறந்த குகையில் தியானித்து கொண்டிருந்தார் அப்போது குழந்தை இயேசு அவருக்குத் தோன்றினார். ஜெரோம், எனது பிறந்த நாளில், எனக்கு ஒரு பரிசு தரமாட்டாயா? என்று இயேசு கேட்க, ஆண்டவரே நான் என் இதயத்தை உமக்குக் கொடுக்கிறேன் என்றார் ஜெரோம். ஆனால் நான் இன்னும் அதிகமானதை உம்மிடம் விரும்புகிறேன் என்று இயேசு சொல்ல, என்னிடம் உள்ளவற்றையும், என்னை முழுவதும் உமக்குக் கொடுக்கிறேன் என்றார் ஜெரோம். இதைவிட இன்னும் அதிகமானதை உம்மால் கொடுக்க முடியாதா என்று இயேசு கேட்க, எல்லா மனிதர்களின் இதயங்களையும் உமக்குக் கொடுக்கிறேன் என்றார் புனித ஜெரோம். இன்னும் அதிகமாக எனக்குக் கொடு என்றார் இயேசு. ஆண்டவரே என்னிடம் உள்ள அனைத்தையும் ஏற்கெனவே உமக்குக் கொடுத்த பிறகு, என்னிடம் வேறு என்ன இருக்கிறது என்றார், ஜெரோம். உன் பாவங்களை வைத்திருக்கிறாய், அவற்றை எனக்குக் கொடு என்றார், இயேசு. ஆண்டவரே அவற்றால் நான் வெட்கமடைகிறேன், அவற்றை வைத்துக்கொண்டு நீர் என்ன செய்ய போகிறீர் என்றார் ஜெரோம். உன் பாவங்களுக்கு மீண்டும் மன்னிப்பு வழங்குவேன் என்றார் இயேசு. அப்படியானால் ஆண்டவரே அவை அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் என்றார் புனித ஜெரோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/03/2018 14:57