2018-03-28 15:21:00

கனடா ஆயர்கள் - பழங்குடி மக்களுடன் உறவை வலுப்படுத்த...


மார்ச்,28,2018. கனடாவில் வாழும் பழங்குடி மக்களுடன் உறவை வலுப்படுத்துவது, கனடா ஆயர்கள் மேற்கொள்ளவேண்டிய தலையாய மேய்ப்புப்பணி என்று, கனடா ஆயர்கள் பேரவைத் தலைவர், ஆயர், Lionel Gendron அவர்கள், மடலொன்றை வெளியிட்டுள்ளார்.

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, மார்ச் 27, இச்செவ்வாயன்று, ஆயர் Gendron அவர்கள், வெளியிட்டுள்ள இம்மடலில், உலகெங்கும் வாழும் பழங்குடி மக்கள், அந்தந்த நாடுகளில் அனுபவிக்கும் அநீதிகளை, திருத்தந்தை அறிவதோடு, அம்மக்களுடன் தன்னை அவர் அடையாளப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

பழங்குடியினருடன் உரையாடல்களை மேற்கொள்வது, அவர்களது கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு அதை, கத்தோலிக்க தலத்திருஅவையின் அம்சங்களாக இணைப்பது ஆகிய பணிகளை ஆயர்கள் மேற்கொள்ளப் போவதாக ஆயர் Gendron அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், கனடா நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், பழங்குடியினரைச் சந்திப்பது, அப்பயணத்தின் முதன்மை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்று, ஆயர் Gendron அவர்கள் தன் மடலில் உறுதி வழங்கியுள்ளார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.