2018-03-28 15:47:00

'சத்யமேவ ஜயதே' என்ற கூற்றின் வெளிப்பாடாக உயிர்ப்பு


மார்ச்,28,2018. இந்தியாவின்  மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும், நீதியோடும், உண்மையோடும் மக்களுக்கென உழைக்கவேண்டும் என்ற வேண்டுதலை, இந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் எழுப்பவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

நடைபெறும் புனித வாரத்தைக் குறித்து பீதேஸ் (Fides) செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில், இப்புனித வாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளும், இந்திய தலத்திருஅவை அனுபவித்துவரும் பல்வேறு நிகழ்வுகளை நினைவுறுத்துகின்றன என்று ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இயேசுவின் வாழ்வு மற்றும் மரணம் குறித்து பேசிய காந்தியடிகள், குற்றமற்ற ஒருவர், பிறரின் நலனுக்கென தன்னையே பலியாக வழங்கியதால், இவ்வுகிற்கு மீட்பைக் கொணர்ந்தார் என்று கூறியுள்ளதை, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

'சத்யமேவ ஜயதே' அதாவது, வாய்மையே வெல்லும் என்ற இந்திய கூற்றின் ஒரு வெளிப்பாடாக, இயேசுவின் உயிர்ப்பு விளங்கியது என்று ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.