2018-03-28 15:56:00

மறைக்கல்வியுரை : ஏழைகளில் இயேசுவின் முகத்தைக் காண்போம்


மார்ச்,28,2018. வத்திக்கானில் இடம்பெறவுள்ள புனித வாரக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளால், வத்திக்கான் தூய பேதுரு வளாகம் நிறைந்திருக்க, இந்த பாஸ்கா காலக் கொண்டாட்டம் குறித்தே திருத்தந்தையும் தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார். இவ்வாண்டில், வழக்கத்திற்கு மாறாக, குளிர் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், சூரிய வெப்பமும் கலந்து தட்ப வெப்ப நிலை இதமாக இருக்க, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களிடையே திறந்த வாகனத்தில் ஒரு வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேடையில் அமர்ந்து, பாஸ்கா காலச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

அன்புச் சகோதர சகோதரிகளே! திருஅவையில் பாஸ்கா கால மூன்று நாள் சிறப்புக் கொண்டாட்டங்கள், இவ்வியாழனன்று துவங்குகின்றன. இந்நாட்களில் நாம், ஆண்டவரின் மரணம் மற்றும் உயிர்ப்பின் உன்னத மறையுண்மைகளை மீண்டும் வாழ்கிறோம். கிறிஸ்து, நம் பாவங்களுக்காக இறந்து புது வாழ்வுக்கு உயிர்த்தெழுந்தார் என்பது, உலகிலுள்ள அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது. அதேவேளை, ஆண்டவரின் சீடர்களாக, உயிர்த்த இயேசுவின் வெற்றியை நம் வாழ்வு வழியாக அறிவிக்க வேண்டிய கடமைக்கும், பணிக்கும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மரணத்திலிருந்து வாழ்வுக்கு இயேசு கடந்து சென்றதில் ஒரு பங்கு, திருமுழுக்கில் நமக்கு வழங்கப்பட்டது. வாழ்வின் கடைநிலையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகள் மீது, இயேசுவைப்போல் அன்புடன்கூடிய அக்கறை கொண்டவர்களாக, இயேசுவுடன்கூடிய ஒன்றிப்பில், இப்புதிய வாழ்வை முழுவதுமாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளோம். ஏழைகளில், மக்களின் துன்பங்களில், தனிமையில் வாழ்வோரில், தேவையிலிருப்போரில், இயேசுவின் முகத்தைக் கண்டுகொள்ளவும், அவரில் நாம், இவ்வுலகிற்காக, மீட்பு, நம்பிக்கை, வாழ்வு மற்றும் உயிர்ப்பின் கருவியாக மாறவும் அழைப்புப் பெற்றுள்ளோம். சிலுவையின் துன்பங்களையும், உயிர்ப்பின் மகிழ்ச்சியையும் அறிந்துள்ள அன்னைமரி அவர்கள், உயிர்த்த கிறிஸ்துவோடு எப்போதையும்விட தற்போது மிக நெருக்கமாக ஒன்றித்திருக்கவும், நம் வாழ்வில் ஒப்புரவையும் உருமாற்றலையும் வழங்கும் இயேசுவின் தெய்வீக அன்பின் வல்லமை குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் தேவையான அருளை நமக்குப் பெற்றுத் தருவாராக.

இவ்வாறு, தன புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாட இந்தப் புனித வார தயாரிப்புகள் உதவுவதாக என வாழ்த்தி, தன் ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.