2018-03-29 14:04:00

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி


மார்ச்,29,2018.  இயேசுவின் திருப்பாடுகளை உருக்கமாகத் தியானிக்கும் இந்தப் புனித வாரத்தில், இறுதி மூன்று முக்கிய புனித நாள்களில் உள்ளோம். புனித வியாழனன்று, இயேசுவின் பாஸ்கா விழாவைக் கொண்டாடுகின்றோம். பாஸ்கா என்றால் கடத்தல் என்று பொருள். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவனின் இரக்கத்தினால் பாரவோனின் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு, செழிப்புமிக்க கானான் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டார்கள். அதாவது அம்மக்கள், இந்நிகழ்வின் வழியாகத் தீமையின் ஆதிக்கத்திலிருந்து கடந்து வந்து இறைவனை பற்றிக்கொண்டனர். புதிய ஏற்பாட்டில், இயேசு ஆண்டவர், நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம்மையே சிலுவையில் பலியாக்கி, தம் உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார். பிறர் வாழ தன்னையே வழங்குவதுதான் தெய்வீகம் என்பதை, நமக்கு உணர்த்துகின்றார் இயேசு. நம் மீட்புக்காக தம்மையே வழங்கியதுபோல, நம் அயலவர்களை அன்பு செய்துவாழவும் நம்மைப் பணிக்கின்றார் இயேசு. அன்று சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசு, தாழ்மைப் பண்பில் வளரவும் நம்மை அழைக்கின்றார். தம் மீட்புப் பணி, இவ்வுலகில் தொடர்ந்து நடைபெற, இயேசு, பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை புனித வியாழனன்று நினைவுகூர்கின்றோம். இந்நாளில், அருள்பணியாளர்கள் அனைவருக்காகவும் இயேசுவுக்கு நன்றி சொல்லி, அவர்களுக்காகச் செபிப்போம். அருள்பணியாளர்கள் அனைவரும் இயேசு செய்த பணியை மனத்துணிவுடனும், மனித மாண்புடனும் தொடர்ந்து ஆற்றி, நீதி, அன்பு சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டவும், இயேசுவை மக்களுக்கு அளிப்பவர்களாகவும், செப மனிதர்களாகவும் திகழ, ஆண்டவரிடம் சிறப்பாக செபிப்போம். இந்நாள்களில் இயேசு நம்மீது வைத்துள்ள பேரன்பை நினைத்து அவரின் திருப்பாடுகளோடு ஒன்றித்திருப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.