2018-03-30 11:20:00

Regina Coeli சிறைக்கூடத்திற்கு திருத்தந்தையின் நினைவுப்பரிசு


மார்ச்,30,2018. மார்ச் 29, இவ்வியாழன் மாலை 4 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள 'Regina Coeli' சிறைக்கூடத்திற்குச் சென்று, முதலில், அங்கு நோயுற்றிருந்த கைதிகளைச் சந்தித்தார்.

இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் திருப்பலியை, மாலை 4.30 மணியளவில் நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்தாலி, மொராக்கோ, கொலம்பியா உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார்.

தான் நிறைவேற்றிய திருப்பலியின் நினைவாக, அச்சிறைக்கூடத்தின் பீடத்தில் வைப்பதற்கு, ஒரு நினைவுப் பரிசை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

முட்புதரில் சிக்கியிருக்கும் ஆட்டுக்குட்டியையும், அதை மீட்கச் செல்லும் மேய்ப்பரையும் சித்திரிக்கும் ஒரு வெண்கலச் சிலையை, Fiorenzo Bacci என்ற இத்தாலிய சிற்பி உருவாக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு 2016ம் ஆண்டு பரிசாக அளித்தார். பொருள் நிறைந்த இச்சிலையை, திருத்தந்தை, 'Regina Coeli' சிறைக்கூடத்திற்கு பரிசாக அளித்தார்.

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக்கூடத்தில் இருந்த அனைத்து கைதிகளையும், பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாடினார்.

'Regina Coeli' சிறைக்கூடத்திற்கு, 1958ம் ஆண்டு, திருத்தந்தை புனித 23ம் ஜான், 1964ம் ஆண்டு, திருத்தந்தை, அருளாளர் 6ம் பால், மற்றும், 2000மாம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான்பால் ஆகியோர் சென்றுள்ளதையடுத்து, இவ்வாண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சிறைக்கூடத்திற்குச் சென்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.