2018-03-30 11:11:00

காலடிகளைக் கழுவிய இயேசு, கை கழுவிய பிலாத்துபோல் அல்ல


மார்ச்,30,2018. இயேசுவுக்குத் தவறான தீர்ப்பளித்தபின், தன் அக்கறையற்ற மனநிலையைக் காட்டும்வண்ணம், தன் கரங்களைக் கழுவிய பிலாத்து போல் அல்லாமல், இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவி, தன் அன்பை வெளிப்படுத்தினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வியாழன் மாலையில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

உரோம் நகரில் அமைந்துள்ள 'Regina Coeli' என்ற சிறைக்கூடத்தில், இயேசுவின் இறுதி இரவுணவு திருப்பலியை, இவ்வியாழன் மாலை நிறைவேற்றியத் திருத்தந்தை, அன்பை வெளிப்படுத்த ஆபத்துக்கள் பலவற்றைச் சந்திக்கத் துணிந்தவர் இயேசு என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

சிறைக்கூடத்திலிருந்த கைதிகளுக்கு தன் மனதிலிருந்து எழுந்த எண்ணங்களை மறையுரையாக வழங்கியத் திருத்தந்தை, காலடிகளைக் கழுவுதல் என்ற பணி, ஓர் அடிமையின் கடமையாக இருந்தது என்பதை குறிப்பாக நினைவுபடுத்தினார்.

அன்றையச் சூழலில் நிலவிய சமுதாய பாகுபாடுகளை, அநீதிகளை மாற்றியமைக்கும் வகையில் இயேசுவின் படிப்பினைகளும், செயல்பாடுகளும் இருந்தன என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் எடுத்துக்காட்டை, அரசர்களும், தலைவர்களும் பின்பற்றியிருந்தால், இவ்வுலகில் எத்தனையோ போர்கள் இடம்பெற்றிருக்காது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

தான் ஒரு பாவி என்றாலும், இன்று தான் இயேசுவின் பிரதிநிதியாக இச்சிறைக்கூடத்திற்கு வந்திருப்பதாகக் கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரை, இயேசு எப்போதும் தேடிச் சென்றார் என்பதை நினைவில் கொள்வது நல்லது என்று எடுத்துரைத்தார்.

மார்ச் 29, புனித வியாழன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய காலடிகளைக் கழுவும் சடங்கில் பங்கேற்ற 12 கைதிகளில், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், இஸ்லாமியர், மற்றும் புத்த மதத்தினர் ஆகியோர் அடங்குவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.