2018-03-31 11:45:00

கொலோசெயம் திடலில் இளையோர் நடத்திய சிலுவைப்பாதை


மார்ச்,31,2018. மார்ச் 30, புனித வெள்ளி, இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள கொலோசெயம் என்ற திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தி நடக்கவிருப்பதை முன்னிட்டு, இவ்வாண்டு நடைபெற்ற சிலுவைப்பாதை, இளையோரால் உருவாக்கப்பட்டிருந்தது.

இன்றைய உலகம் சந்திக்கும் பல பிரச்சனைகள், குறிப்பாக, இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளான, வலைத்தளம் வழியே இயேசுவைத் தொடர்பு கொள்ளுதல், புலம் பெயர்தல், உட்பட பல பிரச்சனைகள் இந்த சிலுவைப்பாதையில் இடம்பெற்றன.

20,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இச்சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை, இறுதி செபத்தைக் கூறினார். ஒவ்வோர் ஆண்டும், திருத்தந்தை இச்செபத்தை அவரே உருவாக்குகிறார். இவ்வாண்டு அவர் கூறிய செபத்தில், வெட்கம், மனவருத்தம் மற்றும் நம்பிக்கை ஆகிய கருத்துக்கள் மையப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், மார்ச் 31, இச்சனிக்கிழமை இரவு, 8.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

ஏப்ரல் 1, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் காலை 10 மணிக்கு விழா திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகல் 12 மணிக்கு, இவ்வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து, 'Urbi et Orbi', அதாவது, 'ஊருக்கும், உலகுக்கும்' என்ற சிறப்புச் செய்தியை வழங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.