சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

உயிர்ப்புப் பெருவிழாவில் திருத்தந்தை தலைமையேற்ற நிகழ்வுகள்

உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியாற்ற புனித பேதுரு வளாகத்திற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் - AP

01/04/2018 14:20

ஏப்.01,2018. கடந்த இரு நாள்களாக மழையால் நனைந்து கொண்டிருந்த உரோம் நகரில், ஏப்ரல் 01, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு காலையில், கதிரவன் பளிச்சென கரங்களை வீசத் தொடங்கினான். எனவே இந்த இதமான காலநிலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார். இத்திருப்பலியில் பங்குகொள்ள, காலை எட்டு மணிக்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான பன்னாட்டு திருப்பயணிகள் வளாகத்தை நிறைத்திருந்தனர். திருப்பலி மேடையின் முன்புறம், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  இத்திருப்பலியில் சிறிய மறையுரை ஒன்றும் நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகல் 12 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் நடு மாடத்தில் இரு கர்தினால்களுடன் வந்து, உரோம் நகருக்கும், உலகுக்குமான ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியை வழங்கினார். கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களுடன் இச்செய்தியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவு செய்தபின், சிறப்பு ஆசீரை வழங்குவதற்குமுன், அவரோடு நின்ற கர்தினால் அவர்கள், இந்த ஆசீரை, நேரடியாகவும், வானொலி, தொலைக்காட்சி, இன்னும் பிற சமூக வலைத்தளங்கள் வழியாக, தகுந்த தயாரிப்போடும், பக்தியோடும் பெறுபவர்களுக்குப் பரிபூரண பலன் உண்டு என அறிவித்தார். அதன்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரை வழங்கினார்.

திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர், கிறிஸ்மஸ் பெருவிழா, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு நாள்களில் மட்டுமே வழங்கப்படுகின்றது.  மேலும், சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களும், இத்தாலி நாட்டின் காவல்துறையும், வத்திக்கான் மற்றும் இத்தாலி நாடுகளின் பண்களை இசைத்து திருத்தந்தைக்கு மரியாதை செலுத்துவதும் வழக்கமாக இடம்பெற்று வருகிறது. இஞ்ஞாயிறன்றும், இந்த மரியாதை திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.

இன்னும், “ஆண்டவர் உரைத்ததுபோலவே, அவர் உண்மையிலேயே, உயிர்த்தெழுந்தார். இந்த வியத்தகு அறிவிப்பை இன்று நாம் மீண்டும் சொல்கிறோம். உங்கள் எல்லாருக்கும் புனித உயிர்ப்பு நல்வாழ்த்துக்கள்!”. என்ற டுவிட்டர் செய்தியையும், “உயிர்ப்புக் காலையில், நம் விசுவாசம் பிறந்துள்ளது. இயேசு உயிரோடு இருக்கின்றார்! இந்த அனுபவம், கிறிஸ்தவ செய்தியின் மையம்”. என்ற இரண்டாவது டுவிட்டர் செய்தியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நாளன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/04/2018 14:20