2018-04-01 11:58:00

உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு – திருத்தந்தையின் மறையுரை


ஏப்.01,2018. ஏப்ரல் 1, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளையில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையைக் கேட்கும்போது, மூன்று எண்ணங்கள் எழுகின்றன.

முதல் எண்ணம் - அறிவிப்பு. ஆண்டவர் உயிர்த்துவிட்டார் என்ற இந்த அறிவிப்பு, துவக்க கால கிறிஸ்தவர்களிடையே ஒருவரை ஒருவர் வாழ்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இறைவனின் அறிவிப்புக்கள் எப்போதும் வியப்பைக் கொணர்ந்துள்ளன. ஆபிரகாமை அழைத்தது முதல், மீட்பு வரலாற்றில் இறைவன் தந்த அறிவிப்புக்கள் அனைத்தும் வியப்பைத் தந்துள்ளன. முதலில், அறிவிப்பு தரும் வியப்பு.

இரண்டாவது: விரைவு. உயிர்ப்பின் அறிவிப்பைக் கேட்ட பெண்கள் விரைந்து சென்றனர். பெண்கள் கூறிய செய்தியைக் கேட்ட பேதுருவும், யோவானும் கல்லறைக்கு விரைந்து சென்றனர். இயேசு பிறப்பின் அறிவிப்பைக் கேட்ட இடையர்கள், பெத்லகேமுக்கு விரைந்தனர். கிணற்றடியில் இயேசுவைச் சந்தித்த சமாரியப்பெண், ஊருக்குள் விரைந்து சென்றார். இன்றும் இது நம்மிடையே நிகழ்கின்றது. ஊருக்குள் ஏதாவது ஒன்று நடக்கும்போது, அதைக் காண விரைந்து செல்கிறோம்.

உயிர்ப்புச் செய்தியைக் கேட்ட ஒரே ஒருவர் மட்டும் தாமதித்தார். "அவரது காயங்களைக் கண்டால் நான் நம்புவேன்" என்று கூறிய தோமாவுக்காக, இறைவன் பொறுமையுடன் காத்திருந்தார்.

மூன்றாவது, கேள்வி. அறிவிப்பைக் கேட்டதும் விரைந்து செயல்படுவதை விட்டு, கேள்விகளை எழுப்புதல் நம்மிடையே உள்ளது. கேள்விகள் எழும்போது, அது, 'நாளை பார்க்கலாம்' என்று, நம் செயல்பாடுகளை தள்ளிவைக்கத் தூண்டுகிறது.

2018ம் ஆண்டு உயிர்ப்பு விழா நமக்குச் சொல்வது என்ன? அறிவிப்பைக் கேட்டு விரைந்து செயலாற்றுகிறோமா? அல்லது, கேள்விகள் கேட்டு, முடிவுகளைத் தள்ளிப் போடுகிறோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.