சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் உடன்பிறந்த உணர்வு

இத்திங்களன்று திருத்தந்தை வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரை - REUTERS

02/04/2018 15:03

ஏப்.02,2018. இயேசுவின் பிறப்பு எவ்வாறு வானதூதரால் அறிவிக்கப்பட்டதோ, அதே போல், இயேசுவின் உயிர்ப்பு குறித்த செய்தியும் வானதூதரால் அறிக்கப்பட்டதை சிறப்பிக்கும் விதமாக, உயிர்ப்புக்குப் பின்வரும் திங்கள், வானதூதரின் திங்கள் என சிறப்பிக்கப்படுகின்றது என்று, இத்திங்களன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்து வரும் திங்களன்று நாம், குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து, உடன்பிறந்த உணர்வை கொண்டாடுகிறோம் என இந்நாளைக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்து, நாம் கடவுளோடும், உடன்பிறந்தோரோடும் இணைக்கப்படுகிறோம், ஏனெனில், கடவுளிடமிருந்தும் நம் உடன்பிறந்தோரிடமிருந்தும் பிரிந்திருக்க காரணமான நம் பாவங்கள் இயேசுவின் உயிர்ப்பில் வெற்றிகொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார். இயேசுவின் உயிர்ப்பின் கனியாக உடன்பிறந்த உணர்வைப் பெற்றுள்ளோம் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதிகால கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஒன்றுபட்ட வாழ்வுக்கு நாமும் திரும்பவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான ஒன்றிப்பையும் பொது நலனுக்கான அர்ப்பணத்தையும் நாம் பெறவேண்டுமெனில், உடன்பிறந்த உணர்வையும், பகிரும் உணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

ஏழைகள் மற்றும் பலவீனமானோருக்கு உதவ, நம் உடன்பிறந்த உணர்வே  இன்றியமையாதது எனவும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு வழியாகவே, ஏழ்மையை அகற்றவும், போரை ஒழிக்கவும், ஊழலையும் குற்றங்களையும் அகற்றவும், நீண்ட கால அமைதியைப் பெறவும் இயலும் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/04/2018 15:03