2018-04-02 15:21:00

'ஆட்டிசம்' விழிப்புணர்வு நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி


ஏப்.02,2018. 'ஆட்டிசம்' (Autism) என்றழைக்கப்படும் மாற்றுத்திறன் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் உலக நாள் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் அமைந்திருப்பது, நம்பிக்கை குறித்த எண்ணங்களை தருகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

'ஆட்டிசம்' குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் 11வது உலக நாள், ஏப்ரல் 2, இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், உயிர்ப்புப் பெருவிழாவையும், இந்த உலக நாளையும் இணைத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில், 'ஆட்டிசம்' மாற்றுத்திறன் கொண்டோரின் எண்ணிக்கை, உலகில் அதிகரித்துள்ளது என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்த சவாலுக்குத் தகுதியான முறையில் நம் பதிலிறுப்பு அமையவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு 160 குழந்தைகளில் ஒரு குழந்தை, 'ஆட்டிசம்' உள்ள குழந்தை என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இக்குழந்தைகளை வளர்க்க குடும்பங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை மனதாரப் பாராட்டியுள்ளார்.

'ஆட்டிசம்' குறித்த பல்வேறு சட்டங்களையும், வழிமுறைகளையும் அரசுகள் வகுத்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் தீவிர முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி பரிந்துரைத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.